குடியரசு தினவிழா கொண்டாட பிரத்யேகமாக ஜனவரி 26 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டத்தின் சுவாரஸ்யப் பின்னணி!
By Rifaya Furvin | Published on : 26th January 2018 01:41 PM |
நமக்கு இந்திய சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தைப் பற்றி தெரிந்த அளவுக்கு குடியரசு தின விழாவைப் பற்றி அதிகம் தெரிவதில்லை. யாரிடம் சென்று கேட்டாலும் ஜனவரி 26 குடியரசு தினவிழா, அதற்காக அரசு விடுமுறை அறிவித்திருக்கிறது. நமக்கெல்லாம் ஒரு நாள் விடுமுறை கிடைக்கும் என்பதைத் தவிர மேற்கொண்டு குடியரசு தினவிழா பற்றிப் பெரிதாக எதுவும் தெரிவதில்லை. தெரிந்து கொள்ளும் முனைப்பும் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை.
1947 ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள் 15 ஆம் நாள் நள்ளிரவில் பிரிட்டிஷார் நமக்கு சுதந்திரம் வழங்கி விட்டார்களே தவிர, நாடு அப்போதும் ஜெனரல் மவுண்ட் பேட்டர்ன் ஆட்சியின் கீழ் தான் இருந்தது. ஏனெனில், ஒரு நாடு தன்னிறைவு பெற்று தனது மக்களின் பாதுகாப்பையும், பொருளாதாரத் தேவைகளையும், தனி மனித உரிமைகளையும், ஒட்டுமொத்த சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்து மக்களை சமரசத்துடன் ஆள்வதற்கான அரசியலமைப்புச் சட்டங்கள், கொள்கைகள் என தெளிவான எந்த ஒரு வரையறையும் அப்போது இந்தியாவிடம் இல்லாமலிருந்தது. முதலில் அதை உருவாக்கியாக வேண்டும். அதுவரை இந்தியா சுதந்திர நாடே தவிர ஜனநாயக நாடு இல்லை. எனவே சுதந்திர இந்தியாவின் முதல் கடமை சிதறுண்டிருக்கும் பிரதேசங்களை இணைத்து முதலில் ஒரு குடைக்கீழான ஆட்சித் தத்துவத்திற்கு ஒப்பான ஒருங்கிணைந்த இந்தியா உருவாக வேண்டும்.
இந்தியா சுதந்திரம் பெற்ற போது, 565 சமஸ்தானங்களாக பிரிந்து கிடந்தது. இதைத்தவிர பாண்டிச்சேரி, கோவா, கேரளாவின் சில பகுதிகள், காரைக்கால், மாஹி, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் ஃப்ரெஞ்சு மற்றும் போர்த்துகீசியர்களின் காலனி ஆதிக்கமும் இருந்து வந்தது. இவை சுதந்திர பகுதிகளாகவே மீண்டும் அறிவிக்கப்பட வேண்டும் என, சமஸ்தான ஆட்சியாளர்கள் கோரினர். இவற்றை ஒருங்கிணைப்பது புதிய இந்திய அரசுக்குச் சவாலாக இருந்தது. முரண்டு பிடிக்கும் சமஸ்தான அரசுகளை இணைத்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் பொறுப்பு அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல், வி.பி.மேனன் மற்றும் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த மவுண்ட் பேட்டன் ஆகிய மூவரிடமும் ஒப்படைக்கப்பட்டது.
இவர்களுடன் இணைந்து படேல் சாம, தான, தண்டம் எனும் மூவகைப் பிரயத்தனங்களைப் பயன்படுத்தி பிரிந்து கிடந்த சமஸ்தானங்களை ஒன்று சேர்க்க படாத பாடுபட்டார். பிகானிர், பாட்டியாலா, குவாலியர், பரோடா முதலிய சமஸ்தானங்கள் உடனடியாக இணைந்தன. பெரும்பாலான சமஸ்தானங்கள் தாமாகவும், சில பேச்சுவார்த்தையின் மூலமும் இணைக்கப்பட்டன. படேலின் விடாமுயற்சியால் 552 சமஸ்தானங்கள் இணைந்தன. தமிழகத்தில் இருந்த ஒரே சமஸ்தானமான புதுக்கோட்டை, 1948, மார்ச் 3ல் இணைந்தது. காஷ்மீர், ஐதராபாத், திருவாங்கூர், ஜூனாகத் போன்ற சில சமஸ்தானங்கள் இணைய மறுத்தன. இதையடுத்து ராணுவத்தை அனுப்பி, அப்பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தார் படேல். இப்படி துண்டு, துண்டாகக் கிடந்த இந்திய சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒரே இந்தியா உருவாக காரணமாக இருந்ததால் படேல் இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என போற்றப்படுகிறார்.
சரி, தனித் தனியாகச் சிதறுண்டிருந்த இந்துஸ்தானத்தை இணைத்து இந்தியா எனும் ஒற்றை நாடாக்கி விட்டால் வேலை தீர்ந்ததா? அது தான் இல்லை, அடுத்தபடியாக இந்தியா குடியரசாக வேண்டும். அப்போது தான் அது ஒரு ஜனநாயக நாடாகக் கருதப்படக்கூடும்.
No comments:
Post a Comment