:
நபிகளார் சுவனம் மற்றும் நரகவாசிகளைப் பற்றி தமது தோழர்களுடன் உரையாடி கொண்டிருந்தார். சுவனவாசிகளின் பண்புகள் குறித்து சொல்லும்போது இப்படிச் சொன்னார்:
"தோழர்களே, சுவனத்திற்கு சொந்தமானவர்கள் மூன்று வகைப்படுவார்கள். அவர்களில் முதலாம் பிரிவினர், தங்கள் பரஸ்பர விவகாரங்களில் மிகவும் நீதியுடனும், நடுநிலையுடனும் நடந்துகொண்டவர்கள். வள்ளல் தன்மையும், நற்செயல்களையும் மக்களிடையே பரப்பியவர்கள். அத்துடன் தமது நடவடிக்கைகளில் மென்மையாகவும், நேர்மையுடனும் நடந்து கொண்டவர்கள்.
இரண்டாம் பிரிவினர், மிகவும் தயாள குணம் மிக்கவர்கள். அவர்கள் தங்களின் உற்றார், உறவினரிடையே இளகிய மனதுடனும், சக மனிதர்களுடன் தாராளத் தன்மையுடனும் நடந்து கொண்டவர்கள். மூன்றாம் பிரிவினரோ, மனைவி, மக்கள் குடும்ப நெருக்கடிகள், வாழ்வியல் தள்ளாட்டங்கள் இவை அனைத்தையும் தாங்கியவர்கள். தடுக்கப்பட்டவற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொண்டு வாழ்ந்தவர்கள்."
சுவனவாசிகளை அடையாளப்படுத்திய கையோடு நபிகளார் நரகவாசிகள் பற்றியும் சொல்லலானார்:
"நரகவாசி நேர்மையின்மையை மட்டுமே தனது அடையாளமாக்கிக் கொண்டவன். அதைப் பின்பற்றுவதையே வாடிக்கையாகக் கொண்டவன். அவனது பேராசை, யாரும் அடையாளம் காண முடியாத அளவு மறைவாக இருக்கும். ஆனால், தொடர்ந்து அடுத்தவரின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டே இருப்பான். கஞ்சத்தனம் மிகைத்திருக்கும். ஆபாச உரையாடல்களில் திளைத்திருப்பான். இங்கிதமற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவான்" என்று நபிகளார் நரகவாசிகள் குறித்து ஒரு நீண்ட பட்டியலிட்டார்.
மனித வாழ்வில் எதிர்ப்படும் இன்னல்கள் எல்லையற்றவை. சூழ்நிலைகள் மனிதனை வசப்படுத்த முனைபவை. அவற்றில் சிக்கிக் கொண்டாலோ கேவலமான வாழ்க்கையில் அவனை வீழ்த்திவிடும். இந்தப் புறச் சூழல்கள் மனிதனை விரக்தியின் விளிம்பில் தள்ளி அவனது பிற செயல்கள் அனைத்தையும் முடக்கிவிடும். அன்றாட வாழ்க்கையை பாதித்துவிடும்.
இறை நம்பிக்கையாளன் அச்சமற்றிருக்க வேண்டும் இத்தககைய சூழல்கள் ஓர் இறை நம்பிக்கையாளனைப் பற்றிப் படரும்போது, அவன் அச்சமற்றிருக்க வேண்டும் என்பதோடு அவற்றைத் துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டியதும் இன்றியமையாதது. அந்தத் தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து தனது இலக்கை நோக்கி நகர்வது முக்கியமானது.
புறச் சூழல்களின் தாக்கம் அதிகமாகும்போதெல்லாம் நபிகளார் இறைவனிடம் பாதுகாவல் தேடுவது வழக்கம். இரண்டு கரங்களையேந்தி இப்படி இறைஞ்சுவதும் நபிகளாரின் பழக்கமாகவும் இருந்தது.
"இறைவா! துன்ப துயரங்களிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். விரக்தியிலிருந்தும், சோம்பலிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். கோழைத்தனத்திலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். கொடுங்கோலர்களின் கொடுமைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்!"
பொறுமை, தன்னம்பிக்கை என்னும் விண்கலங்கள் மூலமாகவேதான் நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு மனிதன் கடந்தாக வேண்டும். இந்த மந்திரம் கற்றுக்கொண்டவர்கள் வாழ்வியல் போராட்டங்களைச் சமாளிக்கத் தெரிந்தவராவர். தோல்விகளைக் கண்டு துவளாமல் வெற்றி இலக்கை எட்டுபவராவர். தன்னைப் படைத்தவனற்றி வேறு எவருக்கும் சிரம் பணியாதவராவர்.


'' Our Lord ! grant us good in this world and good in the hereafter and save us from the torment of the Fire '' [Ameen]
-
{in Arab} :->
Rabbanaa aatinaa fid-dunyaa hasanatan wafil aakhirati hasanatan waqinaa 'athaaban-naar/-
(Surah Al-Baqarah ,verse 201)





No comments:
Post a Comment