இஸ்லாம் வாழ்வியல்: யாருக்கு சுவனம் சாத்தியம்?



தி
ருக்குர்ஆனின் கட்டளைகள் மற்றும் திருநபிகளாரின் சொல், செயல், அனுமதிகளின் தொகுப்பான நபிமொழிகள் ஆகியவற்றின் வழிகாட்டுதலே இஸ்லாமிய வாழ்க்கை நெறி எனப்படுகிறது. சமூக அமைப்பின் கட்டமைப்பு முழுவதும், நல்லொழுக்கத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
“வணக்கத்துக்குரியவன் ஒரே இறைவனைத் தவிர வேறு கடவுளர் இல்லை! முஹம்மது நபிகளார் இறைவனின் தூதர்!” என்ற ‘கலிமா’ எனப்படும் சொற்றொடரைப் பிரகடனப்படுத்தி, தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ் எனப்படும் ஐந்து கடமைகள் மூலமாக அதைச் செயல்படுத்துபவர்கள் முஸ்லிம்கள் எனப்படுகிறார்கள்.
 
வெறுமனே யாரும் சுவனத்தில் நுழையும் வாய்ப்பில்லை. அதற்கு இறைவனின் கருணை என்னும் அனுமதி தேவை. அதைப் பெறுவதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள திருக்குா்ஆனில், இறைவன் ஒரு பட்டியலே தருகிறான். அதைப் பின்பற்றி நடக்க வலியுறுத்துகிறான்.

கஞ்சத்தனம் புரிகிறான்

மனிதன் பதற்றக்காரனாகப் படைக்கப்பட்டிருக்கிறான் என்பது உண்மை. ஒரு துன்பம் அவனுக்கு நேர்ந்துவிட்டால், பதறித் துடித்துப் போகிறான். பொறுமையிழந்து தவிக்கிறான். ஆனால், அந்தத் துன்பம், துயரம் அவனைவிட்டு நீங்கி வசதி வாய்ப்பு ஏற்படும்போது, கஞ்சத்தனம் புரிகிறான்.
இந்தப் பலவீனத்திலிருந்து விலகிய பண்பாளர்கள் குறித்து திருக்குா்ஆனில் இறைவன் ஒரு பட்டியலிடுகிறான். இந்தப் பட்டியலில் முதலாவது இடம் பெறுவது தொழுகையாளிகள். இவர்கள் ஐந்து வேளை தொழுகைகளைத் தவறாமல் கடைப்பிடிப்பவர்கள். அத்தோடு, தங்கள் செல்வங்களில் யாசிப்போருக்கும் தேவையுள்ளோருக்கும் பங்கு உண்டு என்று நம்புகிறவர்கள். உடலால் குனிந்து, நிமிர்ந்து சிரம் பணிவது என்ற நிலையில் மட்டும் இவர்கள் இருப்பதில்லை. மாறாக, சமூத்தின் நலிந்த பிரிவினருக்கும் தங்கள் செல்வத்தில் ஜகாத் என்ற பிரிவின் அடிப்படையில் பங்கிருப்பதாக நம்புபவர்கள். அதை ஆண்டுதோறும் ரமலான் காலங்களில் தவறாமல் அதற்குரிய சரியான அளவில் கணக்கிட்டுத் தேவையுள்ளோருக்குப் பங்களிப்பவர்கள். அப்படிப் பிரித்துத் தராமல் இருப்பது தங்கள் செல்வத்தை அசுத்தமாக்கிவிடும் என்று உறுதியாக நம்புபவர்கள்.
நபித்தோழர் அபூபக்கர், ஜனாதிபதியாகப் பொறுப்பில் இருந்தபோது, ஜகாத் தராதவர்களைச் சட்டரீதியாகத் தண்டிக்க முனைந்தார். அவர்கள் ஐந்து வேளை தொழுகையை விடாமல் தொழுபவர்களாக சரியே!
உண்மையில், திருக்குா்ஆனில் தொழுகை சம்பந்தமாக திருவசனங்கள் இடம்பெறும் இடங்களில் எல்லாம் கூடவே ஜகாத் குறித்தும் வலியுறுத்தப்படுகிறது.
ஜகாத் என்னும் சமூக நலநிதியை இறைவனுக்கு அளிக்கும் அழகிய கடன் என்றும் திருக்குா்ஆன் வர்ணிக்கிறது.

வெற்றிக்கான ரகசியம்

உயர்பண்பாளர்களின் அடுத்த முக்கியமான பண்பு, உதட்டளவில் அல்லாமல் மனப்பூர்வமாகத் தங்கள் செயல்கள் அனைத்துக்கும் மறுமையில் பதில் அளிக்க வேண்டும் என்று நம்பிச் செயல்படுவது.
மறுமையில் வெற்றியாளருக்குரிய செயலேட்டை வலக்கரத்தில் பெறுபவர், தனது வெற்றிக்கான ரகசியத்தை இப்படிக் கூறுவார்:
“இதோ... பாருங்கள் படியுங்கள் எனது வினைச்சுவடியை! நிச்சயம் என்னுடைய கணக்கைச் சந்திப்பேன் என்று எண்ணியே நான் வாழ்ந்திருந்தேன்!”
அடுத்த பண்புநலன், இறைவனின் தண்டனை குறித்து, சதா அச்சம் கொண்டிருப்பவர்கள்.
மறுமையில் இறைவனின் தண்டனை குறித்த அச்ச உணர்வு சம்பந்தமாக ஒருமுறை நபித் தோழர்களுக்குச் சந்தேகம் எழுந்தது. அதை நபிகளாரிடம் கேட்கவும் செய்தார்கள்.
“இறைவனின் திருத்தூதரே! இறைத்தண்டனை குறித்து எங்களைப் போலவே தாங்களும் அச்சம் கொண்டிருக்கிறீர்களா?“
“இறைத்தண்டனை குறித்து அச்சமில்லாமல் எப்படி இருக்க முடியும் தோழர்களே அதைக் குறித்த அச்சத்துடனேயே சதா நான் வாழ்கிறேன்!” என்று நபிகளாரும் பதிலளித்தார்.
அடுத்த பண்பு நலன், இல்லற உறவைத் தவிர, விபச்சாரம் போன்ற தீமைகளிலிருந்து விலகி இருப்பவர்கள்.
இதற்கும் அடுத்ததாக, ஒப்படைக்கப்பட்ட அமானிடப் பொருட்களைப் பாதுகாப்பவர்கள், செய்துகொண்ட ஒப்பந்தங்களை மதித்து நடப்பவர்கள், சாட்சியங்களின் போது, நீதியில் நிலைத்திருப்பவர்கள் என்று பண்பாளர் பட்டியல் தொடர்கிறது.
சும்மா கிடைப்பதில்லை வெற்றியின் கோப்பைகள்!
நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்வதன் மூலமே சுவனங்களை அடைய முடியும். உயர்பண்பாளர்களின் இருப்பிடம்தான் சுவனம்.