:
பீரப்பாவென அனைத்து சமய மக்களாலும் கொண்டாடப்படுகின்ற பீர்முஹம்மது அப்பாவெனும் பதினாறாம் நூற்றாண்டின் தமிழ் ஞானமாமேதை உறைந்திருக்கின்ற தக்கலை, சமயங்களைக் கடந்த அனைத்துச் சமூகத்தாரும் வந்து செல்கின்ற ஓர் ஆன்மீக மையமாக நூற்றாண்டுகளைக் கடந்து அறியப்படுகிறது.
பதினெண் சித்தர்களின் பாடல்கள் இடம்பெற்ற சித்தர் ஞானக்கோவையில் பீர்முஹம்மது அப்பாவின் ஞானரத்தினக் குறவஞ்சி இடம்பெற்றுள்ளது. தமிழில் மூன்று குறம்பாடிய சித்தராக அப்பா அறியப்படுகிறார். இவை அன்றி ஞானப்புகழ்ச்சி, ஞானமணிமாலை, ஞானப்பால், ஞானப்பூட்டு, ஞான நடனம், ஞான விகடமென இருபதுக்கும் மேற்பட்ட ஞான நூல்கள் தமிழுலக்கு பீரப்பா வழங்கிய அருள் கொடைகளாகும்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி நடுப்பேட்டையில் பிறந்து ஆனைமலையிலும், பீர்மேட்டிலும் தவம் செய்து பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் தக்கலைக்கு வந்து உறைந்த இந்த தவஞானி தமிழுக்கு வழங்கியது பதினெண்ணாயிரம் பாடல்களாகும்.
நபிகள் சொல்லும் பதில்கள்
ராஜேந்திர சோழனது ஆட்சிக்காலத்திலுள்ள சோனகன்சாவூர் கல்வெட்டுப் பதிவிலுள்ள சாவூர் என்பது 'சாமூன்' யென்ற அரபிச் சொல்லின் திரிபாகத் தெரிகிறது. நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வந்து தக்கலையில் உறையும் பீர்முஹம்மது அப்பாவின் ஞானத்தமிழ் படைப்புலகம் வானந்தொடும் உயரமாக வளர்ந்து நிற்கிறது. பீர் முஹம்மது அப்பாவின் 'றோசுமீசாக்குமாலை' யில் தன்னை 'அரிய சாமூர் சிறுமலுக்கர் மைந்தன் பிரசங்க றோசுமீசாக்குமாலை யென்று தான் சார்ந்தது சாமூர் சமூகம்' என்பதாக பதிவு செய்கிறார். பீர்முஹம்மது அப்பாவின் மூதாதையர்கள் சாமூர் தேசத்திலிருந்து தமிழகத்திற்குப் புலம் பெயர்ந்து வந்தவர்களாக இருக்கலாம்.
கி.பி.1617-ம் ஆண்டில் இந்த றோசுமீசாக்குமாலையெனும் காவியத்தைப் பாடிய பீர்முஹம்மது அப்பா "பிரியும் நூல் வகையறியேன் பேசும் இலக்கணப் பிரிவறியேன் விரியும் மறைபொருள் ஹதீதறியேன் விள்ளுமொழிக்கெதிர் சொல்லறியேன்" யென்று அவையடக்கமாய் சித்தர் பீரப்பா றோசுமீசாக்குமாலையில் குறிப்பிடுகிறார். 1207 பாடல்களைக் கொண்ட றோசுமீசாக்குமாலை காப்பியச் செழுமை கொண்டது. ஒரு மலரைப் போன்று நபிகள் நாயகம் வீற்றிருக்கும் சபையில் அவருடைய தோழர்கள் நால்வரும் மகள் பாத்திமாவும் மலர்களின் இதழ்களைப் போன்று சுற்றியிருந்து ஒவ்வொருவராக எழுப்பும் கேள்விகளுக்கு நபிகள் நாயகம் சொல்லும் பதில் மொழிகள் இதில் இலக்கிய வடிவம் பெற்று நம் இதயத்தில் பாடல்களாகப் படிகின்றன. பீரப்பா இக்காவியத்தில் கையாளும் உவமைகள் சொல்புதிது பொருள் புதிதாக அமைந்துள்ளன.
பீரப்பாவின் காலத்தில் அவர் வாழ்ந்த கன்னியாகுமரியில் சுனாமி பிரளயம் ஒன்று நிகழ்ந்திருக்கலாம். பீரப்பா "கடலுடைந்தியல் கலங்குவார் போல் மனம் கலங்கி மடலெழுந்த நல்மங்கையர் சோபனமறுத்து" என சுனாமியை உவமையாகப் பதிவு செய்கிறார். "கல்லாக் கசடர் மனம் போன்று கங்குல் வளைந்து திரண்டொன்றாய்" என திரண்டெழும் மேக இருளைக் கல்லாத கசடர் மன இருட்டிற்கு உவமைப்படுத்துகிறார்.
பீர்முஹம்மது அப்பாவின் புகழும் கீர்த்தியும் அன்று கல்குளம் (தற்போதைய பத்மநாபபுரம்) பகுதியை ஆட்சி செய்த வேணாட்டு மன்னர்கள் அறிந்திருந்தனர். அரசவையின் இளவரசனுக்கு உடல் நலம் குன்றிய சோதனை நேர்ந்த போது பீர்முஹம்மது அப்பாவின் கறாமாத் எனும் ஆன்மீக அற்புதத்தின் வழியாக அந்த அரசவையின் துயரம் நீக்கப்பட்டிருப்பதை பீரப்பாவின் பாடல் ஒன்று பதிவு செய்கிறது. நானூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தக் காப்பியம் முதல் முறையாக அச்சேறி, வரும் ஏப்ரல் 10-ம் தேதி தமிழுலகுக்கு அறிமுகம் ஆக இருக்கிறது.
இந்த மெய்ஞ்ஞானியின் விழாவிற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல லட்சங்களாகும். ஆண்டுதோறும் இந்த நினைவு நாள் விழாவில் பீர்முஹம்மது அப்பாவின் ஞானப்பாடல்கள் மண்ணின் இசையோடு இப்பகுதி மக்களால் அவர் சன்னிதானத்தில் இரவு முழுவதும் பாடப்படுகிறது. மத எல்லைகளைக் கடந்து அந்த நாளில் மக்கள் திரளுவது "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பூங்குன்றனின் சொற்களுக்குப் பொழிப்புரையாய் அமைகிறது.