Sunday, November 5, 2017
Islamic ladies
பெனாசீர் (தூத்துக்குடி) - இல்லத்தரசி :
பொது சிவில் சட்டம் பெண்களின் பார்வையில் ஒரு சம உரிமையை தரும் சட்டம் என்று வைத்து கொள்வோம் ,ஆனால் இதனை பகுத்தறிவோடு நாம் சிந்தித்தால் இது இஸ்லாமிய கொள்கையினை பற்றி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட ஒன்று என்பது விளங்கும் . இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்பதாக எடுத்து சொல்ல தலாக் சட்டத்தை ஊக்குவிக்க கூடாது என்பதை மட்டுமே முதலில் கூறியவர்கள், பின்பு இஸ்லாமியர்களிடம் இருந்து பல கேள்விகள் வந்த பின்பு சுதாரித்து கொண்ட அவர்கள் 'இது பெண்களுக்கான சம உரிமை' என்று இப்போது கூறுகிறார்கள். இவர்களின் நோக்கம் இதிலே புரிந்துகொள்ள முடிகிறது. இஸ்லாமியர்களான நாம் இறைவன் நமக்கு திருகுர்ஆன் வழியாக கூறியவற்றையே நாம் பின்பற்றவேண்டும். ஈட்டி முனையில் நிறுத்திட்டபோதும் ஈமான் இழக்கமாட்டோம்.
சபிதா காதர் (அரக்கோணம்) - இல்லத்தரசி, இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் :
பொது சிவில் சட்டம் பற்றி பல்வேறு அதிர்வலைகள் கிளம்பும் இவ்வேளையில் அதை வேண்டாம் என்று பதிவு செய்பவளாக இருக்கின்றேன்
இது ஒரு வகையில் ஒவ்வொருவரின் தனித்த அடையாளத்தை அழிக்க துடிக்கும் முயற்சியே பன்முகத்தன்னைக்கு வைக்கப்படும் வேட்டு .
எங்களுக்கு அளிக்கப்பட்ட பிரத்தியேக உரிமையை விட்டு தர விரும்பவில்லை
சித்தி நிஹாரா (மலேசியா) - இல்லத்தரசி , இக்றா கல்வியியல் அமைப்பு நிர்வாகி :
பெண்களின் கண்ணியம் சுயமரியாதை கட்டிக்காப்பதற்காகவே விவாகரத்துச் சட்டங்களை வரையறுத்து பெண்களுக்கு பல சலுகைகளையும் மறுமணத்திற்கான வழியையும் காட்டியுள்ள ஒரு மார்க்கத்தில் உடன்கட்டை ஏறுதலையும் தலையணையின்றி உறங்க வேண்டுமென்றும், மொட்டையடித்து அவளை நடைப்பிணமாக்கி அலங்கோலப்படுத்துவதையும் கொள்கையாய் வைத்திருந்த கூட்டம் முஸ்லிம் பெண்களை பற்றி பேசுவது வேடிக்கையானது! பொதுசிவில் சட்டம் முஸ்லிம்களின் மீது தொடுக்கும் நேரடிப்போர். ஒருவேளை அவர்கள் கொண்டு வந்தாலும் அது நம்மை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. முஸ்லிம் ஜமாஅத்கள் இதிலுள்ள நடைமுறை சிக்கல்களை களைவதற்கான வாய்ப்பாக இது அமையும் என நினைக்கிறேன்.
யாஸ்மின் (துபாய்) - இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர்
பொது சிவில் சட்டம் என்பது ஒருவரின் அந்தரங்கத்தில் அனுமதியின்றி மூக்கை நுழைப்பது எவ்வளவு அநாகரீகமோ அது போல் அநாகரீமானது. இன்னும் சொல்லப் போனால் அவரவர் மத உணர்வுகளில் கை வைப்பது உயிரை வைத்து உடலை மரத்து போகச் செய்வதற்கு சமம்.
இருக்கும் பொது சட்டங்களையே பாரபட்சமின்றி காட்டாத அரசும், அரசாங்கமும் தான் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து அனைவரையும் சமமாக நடத்தப் போகிறதா?
ஆதிக்க வர்க்கத்தினருக்கு மட்டுமே இருக்கைகளும், பதவிகளும், நீதி என்றும், இருக்கும் அனைத்து தண்டனைகளும், அடக்குமுறைகளும், சிறைகளும் சிறுபான்மையினருக்கும், தலீத்துகளுக்கும் மட்டும் என்று கபட நாடகம் ஆடும் இந்திய தேசத்தில் பொது சிவில் சட்டத்தை வைத்து அனைவரும் சமம் என்பதை நிறுவப் போகிறோம் என்று சொல்வது இந்திய தேசியம் மூளைச்சாவு அடைந்து விட்டதற்கு சமம், “ஆப்பரேசன் சக்சஸ் ஆனா பேசன்ட் டைட்”
ஜபினத் (சென்னை) - கவிஞர், நாவல் எழுத்தாளர் , ஈவண்ட் ஆர்கனைசர் :
நாம் இஸ்லாமிய இந்தியர்களுக்கு மதமும் நாட்டுப்பற்றும் இரு கண்களைப் போன்றதாக கருதுகிறார்கள்/ ஒவ்வொரு இஸ்லாமியனும் எவ்வளவு தீவிரமாக மார்க்கத்தை நேசிக்கிறார்களோ அதே அளவில் தான் நாட்டையும் நேசிக்கிறார்கள். இறைவனின் வேதத்தை பின் பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் வாழவும் செய்து, தான் வாழும் நாடு வகுக்கும் சட்டத்தை பேணியும் காத்து நடக்கிறார்கள்.
ஒரு இஸ்லாமியன் இஸ்லாமிய நாட்டில் வாழ்ந்து இறைவனின் சட்ட திட்டங்களை பேணுதல் என்பது அப்படி ஒன்றும் பெரிய காரியமன்று. ஆனால் மாறுபட்ட கொள்கை உடைய ஒரு நாட்டில் மார்க்கத்தையும் பேணி சட்டத்தையும் மதிப்பது என்பது அத்தனைச் சுலபமானதல்ல, அதைச் சால செய்வது என்பதில் தான் இந்திய இஸ்லாமியனின் நாட்டுப் பற்றும் மார்க்கப் பற்றும் தெளிய நீரோடைப் போல் தெரிய வருகிறது.
இஸ்லாமியன் என்ற காரணத்திற்காய் கொலை, கொள்ளை எந்த வழக்கிலிருந்தும் பாகுபாடில்லாமல் தான் இந்திய சட்டம் தன் தீர்ப்பை வழங்குகிறது. ஏன் ஹெல்மெட்டுக்காக தண்டிக்கப்படும் சிறிய அளவு குற்றமாயினும் எந்த பாகுபாடும் இல்லை. அப்படி இருக்கும் போது தன் மார்க்கத்திற்கே உரிய திருமணம், பர்தா போன்ற உளவியல்களுக்குள் இந்தியச் சட்டம் பாய நினைக்கும் பொழுது பொது சிவில் மீது இஸ்லாமியர்களுக்கு அதிருப்தி ஏற்படுவது இன்றியமையாததாகிவிடுகிறது.
நூற்றாண்டுகளாய் இருந்து வந்த மாட்டு இறைச்சி விசயத்தில் புதிதாக சட்டத்தை கொண்டு வந்து தன் இந்துத்துவ ஆதரவை மறைமுகமாக இந்திய அரசு நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் பொதுவான சட்டம் இஸ்லாமியர்களின் மீது மட்டும் உளவியல் ரீதியாக தன் கோரக்கரத்தை நீட்டுவதால் இதுகாலும் அமைதியாக இருந்த சிறுபான்மையினரின் கோபங்களை கிளறிப்பார்த்துள்ளது. உரிமைகள் பிடுங்கப்படும்போது போராட்டங்கள் எழுவது இயல்பே, எனவே இந்திய அரசாங்கம் இஸ்லாமியர்களின் உளவியல்களோடு விளையாடாமல் பொது சிவில் சட்டம் என்ற எண்ணத்தை கைவிடல் வேண்டும்.
ஒரு வீடாகினும், நாடாகினும் மார்க்கமோ, சட்டமோ இயல்பாகவே வகுத்த சட்டங்களில் மனிதர்கள் இடையில் புகுந்து பெண்களுக்குரிய உரிமைகளை தடுக்கும் பட்சத்தில் வெளியிலிருந்து அத்துமீறல்கள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது இஸ்லாமிய பெண்கள் தங்களுக்கு இயல்பாக வகுக்கப்பட்டுள்ள உரிமைகளை முழுவதுமாக உணர்வாகளாயின் அப்போது தான் இந்திய சட்டம் பொதுவாக பெண்கள் மீதாக எத்தகைய எதிர்ப்புகளை புகுத்தி வருகிறது என்பதை உணர்வார்கள்.
அதே சமயத்தில் இஸ்லாம் சொல்லும் சட்டம் வேறு இன்று நடைமுறைப் படுத்தப்படுவது வேறு. இன்றைய மார்க்க அமைப்புகளுள் ஒற்றுமை இல்லாமையும் இரட்டடிப்பு செய்யப்படும் பெண்களின் உரிமைகளும் ஆண்வர்க்கத்தின் சுய இலாபங்களையும், பதவி ஆசைகளையுமே எடுத்துரைக்கிறது. மார்க்கத்திற்கு முட்டுக்கட்டாக இருக்கும் இந்த ஆணாதிக்க அமைப்புகளிடமிருந்து வரலாற்றைக் கற்றுத் தேர்ந்த இஸ்லாமிய பெண்கள் தங்களையும் தங்கள் உரிமைகளையும் ஈமானின் பால் நின்று மீட்டெடுப்பர் என்று நம்புகின்றேன், எனது கரத்தையும் அதில் இணைக்கின்றேன். அத்தகைய ஈமானிய உணர்வுகளுக்கு உங்கள் பொதுச்சிவில் தேவையில்லை !
பர்வீன் அனஸ் (சென்னை) - Managing Director at BURAK India , Director (company) at Burak Lanka Private Limited.
பொது சிவில் சட்டத்தை பற்றி விவாதிக்கும் முன் நாம் இந்தளவுக்கு பரபரப்பை உண்டாக்கிய காலகட்டத்தை பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும் . நடுவண் அரசு ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சரியான இடைவெளிகளுடனும்- பல பிரச்சனைகளை- முக்கியமாக மதம் ஜாதி சார்ந்த பிரச்சனைகளை பொது சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிறுபான்மையினரை குற்றப்படுத்தி 'இந்து சமுதாய மக்களின் பாதுகாவலன் தாங்கள்தான்' என்பதை மிகைப்படுத்திக்காட்டவே ஒரே கொள்கையுடைய பிரச்சனைகளும் பிரிவினைகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
கர் வாப்சி,லவ் ஜிஹாத்,மாட்டிறைச்சி,ராமர் கோவில், கலபுர்கி டபோல்கர் மற்றும் பன்சாரே போன்றோர்களின் கொலை, ரோஹித் வெமுலாவின் தற்கொலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் என தொடர்ச்சியாக சரியான கால இடைவெளியில் மக்களை சிந்திக்கவிடாமல் உணர்ச்சிகளை தூண்டும் அரசியலே இதுவரை பார்த்து வந்துள்ளது மத்திய அரசு.
மட்டுமல்லாது நலத்திட்டங்கள் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஸ்வச் பாரத் ,பேட்டி பச்சாவோ,டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் மண்ணைக்கவ்வியதாலும் ஜாதி ஓட்டு முறையாலும் பீஹாரில் தோல்வி அடைந்ததால் மத்திய அரசு உத்திரப்பிரதேசம்,உத்ராகண்ட் மற்றும் மணிப்பூர் தேர்தலை தோல்வி இல்லாமல் எதிர்கொள்ள எடுத்த விசயம்தான் பொதுசிவில் சட்டம்.
இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொதுசிவில் சட்டம் என்பது இயலாத காரியம். அனைத்து வித மத மக்களுக்கும் அந்த மதம் சார்ந்த திருமணம்,விவாகரத்து,சொத்துரிமை சட்டங்கள் உள்ளன. இவ்வாறிருக்க முஸ்லிம் சமூகத்தினரின் ஷரீஅ சட்டங்களில் கைவைப்பது என்பது மத்திய அரசின் கையாலாகாத கயவாளித்தனத்தை காட்டுகிறது. இஸ்லாமியர்கள் ஷரீஅ சட்டங்களை திருமணம்,விவாகரத்து,வாரிசுரிமை,சொத்துரிமை களுக்கு பின்பற்றுவது மற்ற சமுதாய மக்களின் பாதுகாப்புக்கோ இறையான்மைக்கோ அச்சுறுத்தலாக இல்லாத போது ஏன் இஸ்லாமியர்களின் தலாக் சட்டங்களை மட்டும் குறி வைக்க வேண்டும்?
நமது சமுதாயத்திலும் முத்தலாக் பற்றிய விழிப்புணர்வு இல்லாததும்,மணக்கொடை பற்றிய தெளிவான அறிவும் பின்பற்றுதலும் இல்லாதது பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. அல்லாஹ் இயற்றிய சட்டங்களை நாம் கடைபிடித்தாலே ஜீவனாம்சம் பற்றிய கேள்வி எழாது. பள்ளிவாயில்களும் ஜமாஅத்தும் சட்டங்களை ஒழுங்காக பின்பற்றாததால் இன்று நமது சட்ட உரிமைகளுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மத்திய அரசு இதை தேர்தல் கால யுக்தியாகவும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றி மூடி மறைக்க எடுத்த ஆயுதமாக கொண்டாலும் , இந்த நேரத்தை பயன்படுத்தி நமது சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஜமாஅத்களும் சமுதாய தலைவர்களும் முன்வர வேண்டும்.
இந்த பிரச்சனையின் வீரியம் குறைந்ததும் ஓரணியில் நிற்கும் தலைவர்கள் பிரிந்து விடாமல் சமுதாய மக்களின் நலனுக்காக இணைந்து பயனிக்க வேண்டும். பள்ளிவாசல்களில் ஜும்ஆ தினத்தில் முஸ்லிம் பெர்ஸனல் போர்டுக்கு ஆதரவாக கையெழுத்துகளை அளிக்க இயக்கம் கடந்து அனனவரும் கையெழுத்திட்டது பெரிய மாற்றம். அந்த மாற்றம் கண்துடைப்பாக மாறிவிடாமல் முத்தலாக்கின் சட்டங்கள் குறித்த தெளிவை ஜீம்ஆ பயான்கள் மூலம் மக்களை சென்றடைய பள்ளிநிர்வாகமும் இமாம்களும் தலைவர்களும் முயற்சி எடுக்க வேண்டும். துண்டுப்பிரச்சாரங்கள்,ஒருநாள் பயிலரங்கங்கள், புத்தகங்கள் ,ஆவணப்படங்கள் மூலமாகவும் இளைஞர்களிடையே எடுத்து செல்லலாம். அதே சமயத்தில் மாற்றுமதத்தவர்களின் முத்தலாக் பற்றிய சந்தேகங்களையும் நாம் அழகிய முறையில் விளக்கம் குறித்து தெளிவாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருமித்த கருத்துக்களோடு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மாற்று சமூகத்தினரிடமும் இணக்கமாக வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.
No comments:
Post a Comment