Tuesday, November 21, 2017

Sothanai

சோதனை

in பொதுவானவை

சோதனையின் போது நாம் கடைப்பிடிக்க

சோதனையின் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்!

பெரும்பான்மையான முஸ்லிம்களிடம் “சோதனை என்பது மனதிற்கு வெறுப்பான காரியங்களில் மட்டுமே உண்டாகும்” எனும் தவறான சிந்தனை வெகுவாகப் பரவியுள்ளது. நிச்சயமாக அல்லாஹ் எமது அனைத்துக் காரியங்களிலும் (நன்மையிலும், தீமையிலும்) எம்மைச் சோதிக்கவே செய்கிறான். காரியங்களைப் பொருத்தமட்டில் மனிதனுடைய பார்வையில்தான் அவற்றில் நல்லது கெட்டது என்ற பாகுபாடு உள்ளதே தவிர‌ யதார்தத்தில் அனைத்துக் காரியங்களுமே நல்லவையாகத்தான் உள்ளன.

இது குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.
இதை ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம் 5726

உயர்வுமிக்க அல்லாஹ் கூறுகிறான்: ஒவ்வோர் உயிரினமும் மரணத்தைச் சுவைத்தே தீரும். மேலும், நல்ல, கெட்ட நிலைமைகளைத் தந்து நாம் உங்களைச் சோதித்துக் கொண்டிருக்கின்றோம். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 21:35)

நிச்சயமாக அல்லாஹ், நாம் நேசிக்கும் விடயத்திலும், நாம் வெறுக்கும் விடயத்திலும் நம்மைச் சோதனைக்கு உள்ளாக்குவான். நம்மில் யாரும் மறைவான அறிவு ஞானம் வழங்கப் பெற்றவர்கள் அல்ல. நமக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் நாம் எந்தச் சோதனையிலும் வீழ்ந்திருக்க மாட்டோம். நமக்கு ஏற்படும் சோதனையின் முடிவுகளை நாம் முன்கூட்டியே அறியும் ஆற்றலுள்ளவர்களாக இருந்திருந்தால் எவ்வித கலக்கமுமில்லாமல் நாம் அமைதி காத்திருப்போம். ஆதலால் அல்லாஹ் சோதனை எனும் அம்சத்தையும், அதன் முடிவுகளையும் தன் வசமே வைத்துள்ளான்.

நோயில் வீழ்ந்த ஒரு அடியான் நோயிலிருந்து குணமடைந்து விட்டால் தன்னை விட்டும் சோதனை அகன்று விட்டதென எண்ணுகிறான். ஆனால் சோதனை என்பது தொடர்ச்சியாக இருந்து கொண்டேயிருக்கும் எனும் யதார்த்தத்தை அவன் புரிந்து கொள்வதில்லை. கஷ்டத்திலும் இலகுவிலும், ஆரோக்கியத்திலும் நோயிலும், வறுமையிலும் செல்வத்திலும், சோதனை இருந்து கொண்டேயிருக்கும். அல்லாஹ் உமக்கு நோயைத் தந்தால் அதில் உம‌து பொறுமையைச் சோதிக்கிறான். அந்த நோயின் மூலம் உன‌து பாவங்களை அவன் மன்னித்து, அந்தஸ்த்துக்களை அவன் உயர்தக் கூடும். இவ்வாறே உனது ஆரோக்கியத்திலும் அல்லாஹ் சோதனையை வைத்துள்ளான். நாளை மறுமை நாளில் உமது தேக ஆரோக்கியம் குறித்து அல்லாஹ் விசாரிப்பான். அந்த விசாரணையே ஒரு சோதனைதான்!

அல்லாஹ் உமக்கு வறுமையைத் தந்தால் அதன் மூலம் அவன் உன்னைச் சோதிக்கிறான். உமது கூலியை அதிகப்படுத்துவான். அல்லாஹ் உமக்குச் செல்வத்தைத் தந்தால் அந்த செல்வம் குறித்தும், அதை நீர் எந்த வழியில் சம்பாதித்தாய் என்றும், அதை எவ்வாறு செலவழித்தாய் என்றும் அல்லாஹ் விசாரிப்பான். அந்த விசாரணையே ஒரு சோதனைதான்!

இன்னும் சொல்லப்போனால் உமது மனைவியும், பிள்ளைகளும் கூட உமக்குச் சோதனைதான்! இவர்களில் யாரையாவது நீ இழந்து அதற்காகப் பொறுமை செய்தால் அதற்காக அல்லாஹ் உமக்கு நற்கூலியை வழங்குகிறான். நீர் உயிர் வாழும் போது இவர்களில் யாரையும் இழக்கவில்லையென்றால் அப்போது அவர்கள் உமக்குச் சோதனையாக ஆகி விடுவார்கள். அல்லாஹ் கூறுகிறான்: (மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம். (அல்குர்ஆன் 18:07) இன்னும் அல்லாஹ் சொல்கிறான்: செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. (அல்குர்ஆன் 18: 46)

மேற்கண்ட முதல் வசனத்தில் அலங்காரத்தை சோதனையாக ஆக்கியதாக அல்லாஹ் கூறுகிறான். இரண்டாம் வசனத்தில் இவ்வுலக அலங்காரத்தின் பட்டியலில் செல்வத்தையும், பிள்ளைகளையும் சேர்த்துள்ளான். இவ்வாறே கஷ்டத்திலும், இலகுவிலும், செல்வத்திலும், வறுமையிலும், ஆரோக்கியத்திலும், நோயிலும் அல்லாஹ் சோதிப்பான். சிலர் எண்ணுவது போல் அல்லாஹ் மனதிற்கு வெறுப்பான விடயங்களில் மட்டும் மனிதர்களைச் சோதிப்பதில்லை. மனிதர்களின் மனங்கள் விரும்பும் விடயங்களிலும் அல்லாஹ் அடியார்களைச் சோதிக்கிறான்.

இறை விசுவாசிகளைச் சோதிப்பது என்பது இறை நியதி என்றால் அச்சோதனையின் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் என்ன? என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

No comments:

Post a Comment