Friday, November 10, 2017

Jeevanaamsam

ஜீவனாம்சம் சமீபத்தில் விவாகரத்தான ஒரு நண்பரையும், அவரது தாயாரையும் சந்திக்க நேர்ந்தது. நண்பர் மிகவும் வாடிப் போய் இருக்க, தாயாரோ புலம்பித் தள்ளி விட்டார்கள். விஷயம் இதுதான்: தலாக் சொல்லியபோது, இரு குடும்பத்தார்களுக்கும் பொதுவாகப் பேசி காரியங்களைச் சுமுகமாக்கி வைத்த ஊர் ஜமாத்தார்கள் பெண் தரப்பிற்கு அதிக நஷ்ட ஈட்டை வாங்கித் தந்துவிட்டார்களாம். “எனது இத்தனை வருடகால உழைப்பும் இதற்கே சரியாகிவிட்டது. இனி எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்க வேண்டும்” என்று வருந்தினார் நண்பர். பரிதாபமாக இருந்தது. ”இஸ்லாத்தில் இந்த நஷ்ட ஈடு, ஜீவனாம்சம் எதுவும் கிடையாது. ஆனா, பொம்பளைன்னா இரக்கம் காட்டணும்னு சொல்லிகிட்டு இஸ்லாத்துக்கு மாறா நடக்குறாங்கம்மா… உன்னை மாதிரி பெண்ணுரிமை பேசுற ஆட்கள் இதையும் சரின்னு சொல்வீங்களே…” என்று என்னையும் தாக்கினார்!! அவரிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன், “விவாகரத்து இஸ்லாமிய முறைப்படி நடக்கலை, சரி. கல்யாணம் இஸ்லாமிய முறைப்படிதான் நடத்துனீங்களா?” இஸ்லாம் அதிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்ட இந்த காலகட்டத்திலும், திருமணம் என்பது இன்னும் பெண் வீட்டாருக்கு ஒரு பொருளாதாரச் சுமையாகவே இருக்கிறது. மகளுக்கு நகைகள், பட்டாடைகள், பாத்திர பண்டங்கள், கட்டில், பீரோ மற்றும் வாஷிங் மெஷின் – ஃப்ரிட்ஜ் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்கள், மாப்பிளைக்கு பைக்-வாட்ச்-செயின், மாமியார் நாத்தனார்களுக்கும் நகைகள் இவைபோக, மப்பிள்ளை வீட்டார் போக்குவரவு – தங்குவதற்கான செலவுகள், திருமண மண்டபச் செலவுகள், பல வித விருந்து செலவுகள், சீர்கள் என்று மூச்சு முட்ட வைக்கும் அளவுக்கு செலவுகள் திருமணத்தின்போது!! இத்தோடு முடிந்ததா? வருடா வருடம் நோன்புச் சீர், பெருநாள் சீர்கள்; தவிர குழந்தைகள் பிறந்தால் மருத்துவச் செலவும் பெண்வீட்டாருடையதே. பிறந்த குழந்தைக்கு நகைகள், விருந்துகள், இன்ன பிற செலவுகள். இங்கு சொல்லியிருப்பவையெல்லாம் குறைந்த பட்சம்தான். ஊருக்கு ஊர் வசதிக்கேற்றவாறு இன்னும் கூடுதலாகவே உண்டு. இப்படி, ஒரு மகளுக்கே தந்தை தன் வாழ்நாள் சேமிப்பைக் கரைக்க வேண்டியிருக்கிறது!! இதில் ஒன்றுக்கு மேற்பட்ட மகள்கள் இருந்தால், தந்தையின் நிலை பரிதாபம்தான்!! இதுவா இஸ்லாம் சொல்லும் திருமண முறை? கேட்டால் மாப்பிளை தரப்பில் சொல்லுவார்கள், “நாங்களும்தான் மஹர் நகை போடுறோம். வலீமா விருந்து வைக்கிறோம்”. சிரிப்பு வருகிறதா, சிரித்து விடுங்கள். 3 முதல் 10 பவுன் நகையை மஹர் என்ற பெயரில் போடுகிறார்கள். அந்த நகை கணவன் அல்லது அவர் வீட்டார் சுய விருப்பத்தின் பேரில் மனைவிக்கு அளிப்பது. மஹர் என்றால் என்ன? பெண்ணின் விருப்பத்திற்கு ஏற்ப நகையோ, பணமோ, அல்லது அவள் கேட்கும் பொருட்கள் வடிவில் கொடுப்பதுதான் மஹர். இவர்களாகவே ஒரு அளவை நிர்ணயம் செய்து கொடுப்பது மஹராகுமா? அல்லது பெண் விருப்பத்தைக் கேட்டுச் செய்யும் நிலைதான் இங்கு நிலவுகிறதா என்ன? திருமணத்தன்று, மணமகளின் தந்தை செலவில் இரு தரப்பிலுமாக குறைந்த பட்சம் ஆயிரம் ரெண்டாயிரம் பேர்கள் விருந்துண்டபின், மணமகன் தன் தரப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறவினர்களுக்கும், மணமகள் வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்படும் சிறிய அளவிலான விருந்தை வலீமா என்று சொல்லிக் கொள்கிறார்கள்!! அரபுநாடுகளில், அரசுகள் ஆணின் திருமண செலவுக்கு நிதியுதவி செய்வதற்கென மையங்கள் வைத்து இருக்கின்றன. நம் நாட்டிலோ, அரசுகள் மதபேதமின்றி பெண்ணின் தாலிக்கு தங்கமும், சீருக்கு பணமும் தருகின்றன. வங்கிகளும் “மகள்களின் திருமணத்திற்கு” என பல திட்டங்கள் வைத்திருக்கின்றன!! இப்படி சேமிப்பு அனைத்தையும் கரைத்து, கடனுக்கு மேல் கடனும் வாங்கி திருமணம் செய்து வைத்த மகள், ஒருவேளை மணவாழ்க்கை தோல்வியுற்று திரும்பி வந்தால், பின்னர் அவள் நிலை என்ன? அவளும் அவள் குழந்தைகளும் தந்தை வீட்டில் அடைக்கலமாகின்றனர். அவளுக்கு அடுத்து ஒரு திருமணம் என்பதெல்லாம் நம் நாட்டில் கனவுதான். விவாகரத்தான அல்லது விதவையான பெண் குறித்து இஸ்லாம் சொல்வதென்ன? “தலாக் என்றால், கொடுக்கப்பட்ட மஹர் திரும்பி வாங்கப்படக்கூடாது. குழந்தைகளின் (இருப்பின்) எல்லாவித செலவும் அக்குழந்தைகளின் தந்தையுடையதே”. துணையை இழந்தாலும், பிரிந்தாலும், அவர்கள் உரிய காலத்தில் உடன் மறுமணம் செய்துகொள்ளுதல் வேண்டும். இது ஆண், பெண் இருவருக்குமான பொதுவிதி. இதற்கு வயது ஒரு தடையே கிடையாது. “திருமணம் ஈமானில் பாதி” என்ற ஹதீஸ் முதல் திருமணத்திற்கானது மட்டுமல்ல. முஸ்லிம் ஆணும், பெண்ணும் இறுதி வரை ஒரு திருமண பந்தத்தில் இருக்க வேண்டும். அதுதான் இஸ்லாமிய கட்டளை. இதனால்தான் விவாகரத்தான பெண்ணுக்கு ஜீவனாம்சம் என்பது இஸ்லாத்தில் கிடையாது. தன்னை வேண்டாமென்று ஒதுக்கிவிட்ட ஒருவனின் பணத்தை எதிர்பார்த்து வாழும் அவலநிலையை விட்டும் பெண் பாதுகாக்கப்பட்டு, அதே சமயம

No comments:

Post a Comment