Tuesday, November 7, 2017

Islamic ladies

ஹிஜாப் பெண்களுக்கு மட்டும்தானா? “ஹிஜாப்” என்ற சொல் இன்று பொதுவாக எல்லா சமூகத்தினரும் அறிந்த ஒன்றாகிவிட்டது. அநேகமுஸ்லிம்களின் சமூக வலைத்தள பக்கங்களில் “ஹிஜாப்” போட்ட பெண்களின் படங்களுடன், ஹிஜாப் அணிவதால்விளையும் நன்மைகளும், போதிய பாதுகாப்பான உடைஅணியாத பெண்களுக்கு நேரும் ஆபத்துகளும்கடமையுணர்வோடு எடுத்துரைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஹிஜாப் என்றால் என்ன? ஹிஜாப் என்ற அரபு வார்த்தைக்கு திரை, தடுப்பு, மதில் (curtain, barrier, screen, veil, partition) என்று பலபொருட்கள் உண்டு. ’திரை’ என்ற அர்த்தம் இருப்பதால், அது பெண்களுக்கான ஒன்றாக மட்டுமேகருதப்பட்டுவிட்டது போலும்! ஹிஜாப் என்பது ஒரு தடுப்பு. எதற்கான தடுப்பு? எல்லாவற்றிற்கும் - எண்ணங்கள், செயல்கள், இச்சைகள், ஆடைகள் என ஐம்புலன்களுக்குமான தடுப்பு. வரம்பு மீறஅனுமதிக்காத தடுப்பு. யாருக்கெல்லாம் ஹிஜாப்பொருந்தும்? "கற்பு” எப்படி இருபாலருக்கும் பொதுவானஒரு நிலையோ, அதுபோல இஸ்லாத்தில் ‘ஹிஜாப்’பும்இருபாலருக்கும் உரியதாகும். ஃபோட்டோ ஷாப் உதவியோடு, மோடி என்றால் “க்ளீன் கவர்னென்ஸ்” என்று பதிய வைத்தது போல, ‘ஹிஜாப்’ என்றால் ‘பெண்ணிற்கான கட்டுப்பாடு’ மட்டுமே என்றஎண்ணத்தை அனைவர் மனதிலும் ஆழப் பதியவைத்துவிட்டார்கள். உண்மை அதுவல்ல. ஆடையில்மட்டுமல்ல கட்டுப்பாடு, பார்வை, செயல்கள், எண்ணங்களுக்கும் கட்டுப்பாடு உண்டு - ஆண் பெண்இருவருக்குமே. ஆடை என்று வரும்போது, ஆடையின் நீள-அகலத்தில்மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமானகட்டுப்பாடுகள். மற்றபடி, இறுக்கமானவை - மெல்லியவை - வசீகரிக்கும் தன்மை கொண்டவை - எதிர்பாலினத்தைப்போல காட்டும் உடை - ஆகியவற்றின் கட்டுப்பாடுகள்இருதரப்பிற்கும் உண்டு. ஆண்களுக்கு பெண்களைப் போல முழு உடலையும்மறைப்பது கட்டாயமில்லை என்ற போதிலும், அவசியமின்றிஉடலை வெளிப்படுத்துவதும் தவிர்க்கப் படவேண்டியதேஎன்பது இந்த நபிமொழியின் வாயிலாய்அறிந்துகொள்ளலாம்: 'இறைநம்பிக்கையாளனின் வேட்டி (கீழங்கி, கால்சட்டை) அவனது கெண்டைக்காலில் பாதிவரை இருக்கும். அதனைவிடக் கீழேயும் கணுக்கால்களுக்கு மேலேயும்இருந்தால் அதனால் பாவம் ஏதுமில்லை. இன்னும்அதனைவிடக் கீழே இருப்பது நரகத்திற்குரியதாகும். (அதாவது அது பாவகரமான ஒரு செயல்) இந்தக் கடைசிவாக்கியத்தை மக்களுக்கு இதன் முக்கியத்துவமும்தெளிவாகிவிடட்டும் என்பதற்காக அண்ணலார் மூன்றுமுறை கூறினார்கள். முழுமையான ஆடை அணியுமளவு வசதி பெற்ற ஒருவர், தரையில் இழுபடும்படி ஆடையை இழுத்துக் கொண்டு வந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட அறிவுரை இது. இந்நாளில் ஆடைக்கு வசதியற்றவர் என்ற நிலையில் இல்லாதபோதும், கை, தொடை, இடுப்பு போன்றவை வெளியே தெரிந்துகொண்டிருக்க, தரையில் இழுபடும்படி உடை உடுத்தும் நாகரீகக் கோமாளிகள் அறிந்துகொள்ள வேண்டிய அறிவுரையாகும் இது!! உடைக்கு மட்டுமல்ல கட்டுப்பாடு!! ஆண் பெண் இருவரின் “பார்வை”க்கு இருக்கும் கட்டுப்பாடுதான் மிக முக்கியமானது. குர் ஆனில், ஆண் – பெண் இருவருக்குமான வரம்புகளைக் கூறும்போது, இறைவன் முதலில் ஆணுக்கே கட்டளையிடுகிறான்: நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் வெட்கத் தலங்களை (கற்பை) பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு மிக பரிசுத்தமான செயலாகும். நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவற்றை அறிபவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 24:30) ஆடை, எண்ணங்கள், செயல்களின் வரம்பு மீறாதீர்கள் என்று நேரடியாகச் சொல்லாமல், ”பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு” கூறுவது ஏன்? பார்வை – அதுதான் தவறுகளின் தொடக்கப் புள்ளி!! பார்வையைக் கட்டுப்படுத்தாமல் விட்டால், நிச்சயம் அது மற்ற தவறுகளுக்கு இழுத்துச் சென்றுவிடும். கண்களும் விபச்சாரம் செய்கின்றன. ‘கண்களின் விபச்சாரம் பார்வை’ என்பதும் நபிமொழி. இன்றைய உலகில் இது எத்தனை உண்மை? பெண்கள் எங்கு சென்றாலும், அவர்களை ஆண்களின் பார்வைகள் பின் தொடருகிறது. அதைத் தவிர்க்கச் சொன்னால் உடனே, “நாங்க பார்க்கணும்னுதானே பெண்கள் இப்படி ஆடை அணிகிறார்கள்” என்று பதில் வரும்!! பெண்களின் ஆடையைப் பொறுத்து பார்வையைத் தாழ்த்துமாறு ”சாய்ஸ்” கொடுக்கவில்லை இறைவன். மற்ற தவறுகளுக்கு இடம்கொடாமல் இருக்கவே பார்வையைத் தாழ்த்துமாறு உத்தரவிடுகிறான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஓர் அன்னியப் பெண் மீது திடீரெனப் பார்வை பட்டுவிட்டால் உடனே பார்வையை திருப்பிக் கொள்ளுங்கள். அவள் மீது இரண்டாவது பார்வையைச் செலுத்தாதீர்கள். முதல் பார்வை உம்முடையது; இரண்டாது பார்வை உம்முடையதன்று. மாறாக, ஷைத்தானுடையது" தற்செயலாகப் பார்ப்பது தவறில்லை. ஆனால், உடனே பார்வையைத் திருப்பிக் கொள்ளவேண்டும். இல்லாமல், போனால், விளைவுகளுக்கான தண்டனைகளில் உங்களுக்கும் பங்குண்டு. ”அழகிகள் பிடிபட்டனர்” என்று பெண்களை மட்டுமே சிறையில் தள்ளும் இ.பி.கோ. போன்றது அல்ல இஸ்லாமியச் சட்டம்!! இருதரப்புக்குமே கடும் தண்டனை உண்டு!! கவனம்!! குர் ஆனில், இன்னின்ன உறவல்லாத ஆண்களின் முன்பு பெண்கள் ஹிஜாப் இன்றி வரக்கூடாது எனக் கூறப்பட்டுள்ள வசனத்தை (24:31) எடுத்துக் கொண்டு, பெண்களுக்கு எச்சரிக்கைகளை அள்ளி வீசும் ஆண்களுக்கு, அதில் கூறப்பட்டுள்ள உறவு முறையில் இல்லாத பெண்களைத் தான் ஏறிட்டுப் பார்ப்பதும் பாவமே என்கிற எண்ணம் வாராது போனது ஏன்? இன்னும், பெண்களைத் தொடுவதிலிருந்தும் விலகிக் கொள்ள ஆண்களுக்குத்தான் உத்தரவிடப்படுகிறது. "உங்களில் ஒருவர் தனக்கு அந்நியமான பெண்களைத் தொடுவதைவிட அவர் இரும்பினாலான ஊசியால் தனது தலையில் அடித்து காயம் எற்படுத்திக்கொள்வதுசிறந்ததாகும்" திருமதி. மிஷெல் ஒபாமா, சவூதி சென்றபோது அவருக்கு அங்குள்ள அமைச்சர்கள் கைகொடுக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம். அதற்கு காரணம் இந்த வழிகாட்டலே. ’எந்த ஆடவரும் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம், ஏனெனில் சைத்தான் அவர்களில் மூன்றாமவனாக ஆகிவிடுகிறான்’என்ற நபிமொழியும், அவ்வாறு தனிமையான சந்தர்ப்பம் அமைந்தால், அங்கிருந்து விலகிச் சொல்லும் பொறுப்பு ஆண்களுடையதே என்று தெரிவிக்கிறது. சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய பல கட்டளைகளும் ஆண்களுக்கே கொடுக்கப்பட்டிருந்தும், பெண்களுக்கு நேரும் பாலியல் வன்முறைகளுக்கு அவர்களையே பொறுப்பாக்கி பலிகடா ஆக்குகின்றனர். பெண்களில் பெரும்பாலோனோர், தம்முடைய ஆடைகளில் கவனம் செலுத்தவே செய்கின்றனர். இருந்தும், பாலியல் வன்முறைகள் பெருகுவதற்கு ஆண்கள் தமக்கு விதிக்கப்பட்ட ஹிஜாபைப் பேணாததே முழுமுதற் காரணம் என்பதை மறுக்கவே முடியாது. ஆம், ஆண்கள் தம் “பார்வை”யை முதற்கண் தடுத்துக் கொண்டால், பாலியல் குற்றங்கள் ஆரம்பக் கட்டத்திலேயே தடுக்கப்பட்டுவிடும். இது, முஸ்லிம் ஆண்களுக்கான அறிவுரை மட்டுமல்ல, அனைத்து ஆண்களுக்கும் பொருத்தமானது. · இஸ்லாமிய வரலாறு முழுதும் பெண்களுக்கான பாடங்கள் மட்டுமே இருப்பதாக கருதிக் கொண்டிருக்கும் ஆண்கள், வரலாற்றை மீண்டும் வாசித்துப் பார்க்கட்டும். யூசுஃப் (அலை) நபியை ஒரு அழகிய பெண் அழைத்தபோதும், மறுத்தால் சிறையில் அடைத்து வஞ்சிக்கப்படுவோம் என்று தெரிந்தும், இறைவனுக்கு மட்டுமே அஞ்சி மறுத்த வரலாறு ஆண்களுக்கானதுதான். · வழியில் கண்ட பெண்ணை ஒரு ஆண் வைத்த கண் வாங்காமல் பார்த்தபோது, அந்த ஆணின் முகத்தைத்தான் நபிகளார் தன் கையால் பிடித்துத் திருப்பி விட்டாரே ஒழிய, அந்தப் பெண்ணைக் கடிந்து கொள்ளவில்லை!! · ”உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து (இச்சையைக் கிளறி)விட்டால், உடனே அவர் தம் மனைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்" என்பதுதான் பொது இடங்களில் உணர்ச்சி வயப்படும் சூழ்நிலை ஏற்படும்போது பின்பற்ற வேண்டிய நபி (ஸல்) அவர்களின் அறிவுரை. இங்கும் ஆண்களுக்கே கட்டுப்பாடு அறிவுறுத்தப்பட்டுள்ளது!! ஆகவே ஆண்களே, மாற்றத்தை உங்களிடமிருந்து துவங்குங்கள். பார்ப்பதற்கு நீங்கள் தயார் இல்லையெனும்போது, பார்க்கப்படுவதற்காகவே ஆடை அணிகிறார்கள் என்று நீங்கள் சொல்பவர்களும் திருந்திவிடுவார்கள்!! பெண்களே, உங்களின் உடல் கடைவீதிப் பொருள் அல்ல, அழகாக்கி பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்கு. உணர்வும், அறிவும், பலமும் கொண்டு ஆணுக்கு நிகரான வலிமையான படைப்பினம் என்பதை மறந்து உங்களே நீங்களே விற்பனைக்குள்ளாக்காதீர்கள். ”இரு கைகள் இணைந்தால்தான் ஓசை” என்பதாக, சமூகத்தில் பாதுகாப்பும், அமைதியும் நிலவ, ஆண் – பெண் இருதரப்புமே தம் பணியைச் சரியாகச் செய்தல் வேண்டும். பெண்கள் மட்டுமே சரியாக இருந்துவிட்டால் உலகில் எல்லாம் சீர்திருந்திவிடும் என்றால், இஸ்லாத்தில் முறையற்ற உறவு, பாலியல் வன்முறை, விபச்சாரம் ஆகியவற்றிற்கான தண்டனைகளுக்கான தேவையே இருந்திருக்காதே!! சாமானிய ஆணுக்கும், பெண்ணுக்கும் இருக்கும் கடமையை விட, சமூகத்தின் ஊடகங்கள் மூலம் எப்பொருளுக்கும் கவர்ச்சியூட்டி, போதைப்பொருள் போலாக்கி, ஆபாசத்தை அடையாளமாக்கி விளம்பரப்படுத்துபவர்களும் கவனிக்க வேண்டும், உங்களின் பொருள் விற்பனையாக வேண்டும் என்பதற்காக எங்கோ ஒரு மனதின் மூலையில் பாவத்தை விதைக்க வேண்டுமா?? யாரோ ஒரு பெண்ணின் அல்லது சிறுகுழந்தையின் வாழ்க்கை சீரழிய வேண்டுமா?? குடும்ப, சமூகப் பொறுப்புக்களை காக்க வேண்டிய புஜங்கள் பாவம் சுமக்க வேண்டுமா?? சிந்திப்பீர்களா??

No comments:

Post a Comment