Monday, November 13, 2017

Islamic Article


الحق انتظر நேர்வழியை அறிந்து நடப்பதற்கும், நேர்வழி நடந்தவர்களைப் பின்பற்றுவதற்கும் உள்ள வித்தியாசம் மனிதன் தன்னைப் படைத்த இறைவனுக்கு மாறு செய்ய துணியமாட்டான் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ள ஷைத்தான், இறை கொடுத்த நேர்வழியில் நடப்பதாக நம்பவைத்து, அந்த நேர்வழியில் பல இடைச் செருகல்களைச் சொருக வைத்து விடுகிறான். நேர்வழியில் நடப்பதும் ஒன்றுதான், அந்த நேர்வழியில் நடந்து சென்ற முன்னோர்களையும், மூதாதையர்களையும் பின்பற்றுவதும் ஒன்றுதான் என்ற வசீகரத் தோற்றத்தை உண்டுபன்னி விடுகிறான். இதனை சாதாரணமாக படிப்பவர்களும் இதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றே நினைப்பார்கள். ஆழ்ந்து நோக்கும்போது இறை கொடுத்த நேர்வழியை அறிந்து நடப்பதற்கும், நேர்வழி நடந்தவர்களைப் பின்பற்றுவதற்கும் உள்ள வித்தியாசம் தெளிவாகவே புரியும். . நேர்வழி அறிந்து நடப்பதில் தவறு ஏற்பட பெரும்பாலும் வாய்ப்பில்லை. ஆனால், நேர்வழிநடந்தவர்களின் செயல்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு சரியாகவே இருக்கும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. அவர்களிலும் இறை கொடுத்த நேர்வழிக்கு முரணாகச் சில சம்பவங்கள் இடம் பெற்றுவிடலாம். இந்த நிலையில் இறை கொடுத்த நேர்வழி அறியாது, நல்லடியார்களைப் பின்பற்றுகிறவர்கள், அவர்கள் அறியாது செய்த தவறுகளையும் மார்க்கமாக நம்பிச் செயல்படும் குற்றத்திற்கு ஆளாகிறார்கள். இங்கு இறைவனது நேர்வழியைப் பார்த்து செயல்பட்ட நல்லடியார்களிடம் இடம் பெற்ற தவறுகளை அல்லாஹ் மன்னிக்க வழி இருக்கிறது. காரணம், அல்லாஹ் மனிதன் தனது கட்டளைப்படி நடக்க முற்படுகிறானா? என்றே சோதிக்கின்றான். அந்த முயற்சியில் ஈடுபட்டு பின் தவறாக நடந்தால் இரண்டு நன்மைகள் முயற்சியில் ஈடுபட்டு தவறாக நடந்தால் முயற்சிக்கு ஒரு நன்மை. தவறுக்கு குற்றம் பிடிக்கப்படமாட்டான். “தீர்ப்பளிக்கும் ஒருவர், தாம் தீர்ப்பளிக்கையில் (குர்ஆன், ஹதீஸின்படி) தெண்டித்து அதை முறையானதாக்கி விட்டால் அவருக்கு இரண்டு கூலியுண்டு” என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் (அம்ருப்னில் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரீ, முஸ்லிம்) என்ற ஹதீஸின்படி அவர்கள் தப்பி விடுகிறார்கள். ஆனால் இறை கொடுத்த நேர்வழியை அறியாது முன் சென்ற நல்லடியார்களைப் பின்பற்றுகிறவர்கள் மூன்று தவறுகளைச் செய்கிறார்கள். 2:37 வசனப்படி இறை கொடுத்த நேர்வழியை அறிய முயற்ச்சிக்கவில்லை. இது ஒரு தவறு. அடுத்து, “உங்கள் ரப்பிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்; அவனையன்றி வேறெவறையும் பாதுகாவலர்களாக்கி (அவர்களைப்) பின்பற்றாதீர்கள்” (அல்குர்ஆன் 7:3) என்ற இறைவசனத்தைப் பொய்யாக்கி முன்சென்ற நல்லடியார்களைப் பின்பற்றுவது இரண்டாவது பெருங்குற்றமாகும். முன்னோர்களை பின்பற்றுவதை கொண்டு ஒவ்வொரவரும் ஒவ்வொரு முன்னோரைப் பின்பற்றி தங்களுக்குள் பல பிரிவுகளாகப் பிரிந்து விடுகிறார்கள். இது 3-வது பெருங்குற்றமாகும். எனவே இவர்கள் இறைவனது தண்டனையிலிருந்து தப்ப முடியாது. . காலங்காலமாக ஆதத்தின் சந்ததிகள் இப்படி முன்னோர்களைப் பின்பற்றித்தான் வழிக்கேட்டில் சென்றுள்ளார்கள் என்பதற்கு குர்ஆனின் பல வசனங்கள் சான்றுகளாக இருக்கின்றன. உதாரணமாக., “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் நடக்கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிப் பெற்றவர்களுமாகவும் இருந்தாலுமா?” (அல்குர்ஆன் 2:170) இறை கொடுத்த நேர்வழியிலிருந்து வழி சறுகச் செய்யவே ஷைத்தான் முன்னோர்களைப் பின்பற்றும் மோகத்தை மனிதனுக்கு ஊட்டுகிறான். . இதனால் மனிதனை வழி கெடுக்க இரண்டுவித வாய்ப்புகள் அவனுக்குக் கிடைக்கின்றன. மனிதர்கள் என்ற அடிப்படையில் முன்னோர்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற தவறான செயல்களையும் மார்க்கமாக எடுத்து நடந்து வழிதவறிச் செல்லச் செய்யும் சந்தர்ப்பம் ஒன்று. முன்னோர்களின் பெயரால் பொய்யானவைகளை இட்டுக் கட்டி, அவற்றை எடுத்து நடப்பதன் மூலம் வழித்தவறிச் செல்லச் செய்யும் சந்தர்ப்பம் ஒன்று. முன்னோர்களின் பெயரால் பொய்யானவைகளை இட்டுக் கட்டி, அவற்றை எடுத்து நடப்பதன் மூலம் வழித்தவறிச் செல்ல செய்யும் வாய்ப்பு மற்றொன்று! எப்படியும் முன்னோர்களின் பெயரால் மனிதனை வழி தவறச் செய்து விடுகிறான் ஷைத்தான். இப்படி முன்னோர்களின் பெயரால் வழி தவறிச் செல்லும் மனிதன், அதன் காரணமாக நரகத்தை அடைந்து, அங்கு கடுமையான வேதனை அளிக்கப்படும்போது தான் அந்தத் தவறை உணர்ந்து கூச்சல் போடுகிறான். அதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான். . நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ. கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!; எங்கள் ரப்பே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம். அவர்கள் எங்களை வழிக் கெடுத்து விட்டார்கள். எங்கள் ரப்பே! அவர்களுக்கு இருமடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” என்று கதறுவார்கள். (அல்குர்ஆன் 33:66-68) . இந்த அவர்களின் கதறல் அவர்களுக்குப் பலன் அளிக்காது. நரகை விட்டும் தப்ப வேண்டுமென்றால் இவ்வுலகிலேயே முன்னோர்களைப் பின்பற்றுவது தவறு என்று உணர்ந்து, அதை விட்டும் விலகி அல்லாஹ்வின் நேர்வழியான அல்குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் விளங்கிப் பின்பற்ற முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment