Monday, November 6, 2017

நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள்








ShareShare


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இருபத்தோராவது சொற்பொழிவு
ஹிஜ்ரி எட்டு, ரமளான் மாதத்தில் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட வெள்ளிக்கிழமையன்று நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய பிரசங்கம் இது.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கஃபத்துல்லாஹ்வின் வாயிலில் எழுந்து நின்று அல்லாஹ்வை புகழ்ந்தபின் (ஹம்தும் ஸலவாத்தும் கூறியபின்) மூன்று தடவை 'அல்லாஹு அக்பர்' என்றார்கள். பின்னர் அவர்கள் பேசியதாவது:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றினான்;தன் அடியானுக்கு வெற்றியைத் தந்தான். (எதிரிப்)படைகளைச் சிதற அடித்தவன் அவனே. அறியாமைக் காலத்திலே (வழிதவறிய ஜாஹிலியத்தான காலத்தில்) குலப்பெருமையும், பணப்பெருமையும் பாராட்டப்பட்டு வந்ததை இன்று என் இரண்டு காலடிகளிலும் போட்டு மிதித்து விட்டேன். ஹஜ்ஜுப் பிரயாணிகளுக்குத் தண்ணீர் வினியோகிக்கும் உரிமை, கஃபத்துல்லாஹ்வின் காவலுரிமை ஆகிய இரண்டு உரிமகளை மட்டுமே விட்டு வைத்துள்ளேன். முன்பு அவற்றை நிர்வகித்து வந்தவர்களிடமே இப்போதும் அந்த உரிமைகளை விட்டு வைத்துள்ளேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
'குரைஷிக்குலத்தவரே! வழிதவறிய(ஜாஹிலியத்தான) காலத்தில் நீங்கள் மதித்து வந்த வீண் கவுரவங்களையும்,குடும்பப் பெருமைகளையும் அல்லாஹ் அழித்தே விட்டான். நீங்கள் யாவருமே ஆதமின் புத்திரர்கள். ஆதம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறார் என்பதை நன்கு மனதில் இறுத்துங்கள்.
"மனித இனத்தவரே, உங்களை நாம் ஓர் ஆணிலும் ஓர் பெண்ணிலும் இருந்துதான் படைத்துள்ளோம். நீங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்வதற்காகவே உங்களை இனங்களாகவும், குடும்பங்களாகவும் பிரித்து வைத்துள்ளோம்.
உங்களில் பயபக்தியுடன் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்களே இறைவனிடம் மிகவும் கண்ணியம் பெற்றவர்களாவர்.நிச்சயமாக அவன் யாவும் அறிந்தவன்; எங்கும் நிறைந்தவன்" என்று அல்லாஹ் அறிவித்துல்லானல்லவா?
மது குடிப்பதையும், வட்டி வாங்குவதையும், வட்டி கொடுப்பதையும் அல்லாஹுத்தஆலா இன்றிலிருந்து 'ஹராம்' ஆக்கிவிட்டான்.
தடி அல்லது சவுக்கால் அடித்து, உயிர் வாங்கும் கொலையயொத்த படுகொலைக்கு நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டிய தொகை நூறு பெண் ஒட்டகங்களாகும் (என்று நிர்ணயித்துள்ளேன்). இவற்றில் நாற்பது ஒட்டகங்கள் கர்ப்பமானவையாக இருக்க வேண்டும்.
மக்களே! (குல அடிப்படையில்) இஸ்லாத்தில் உடன்பாடு செய்ய இடமில்லை. ஜாஹிலியத்தான அறியாமைக் காலத்தில் செய்யப்பட்ட அத்தகைய ஒப்பத்தங்களை(க்குல அடிப்படையிலான ஒப்பந்த்தங்களை)இப்போது அமல் செய்ய முடியாது.
ஈமான் கொண்ட அனைவரும் மற்ற யாவருக்கும் எதிராக ஒரு கட்சியாக உள்ளனர். அவர்கள் சார்பாக அவர்களில் மிகவும் கீழான நிலையிலுள்ளவரும் (யாருக்கு வேண்டுமாயினும்)அடைக்கலம் அளிக்கலாம்; அவர்களில் வெகு தொலைவிலுள்ளவர்களும் அவரின் அழைப்புக்குரலுக்கு உடனே இணங்கி நடக்க வேண்டும். (அவர்களிலுள்ள) போர் செய்யும் வீரர்கள், (போர் செய்யாது பலஹீனமான நிலையில்) உட்கார்ந்துள்ள தங்கள் கூட்டத்தினருக்கு (ஏதேனும்) ஒதுக்க வேண்டும்.
ஒரு காஃபிருக்குப் பகரமாக எந்த முஃமினும் கொல்லப்படக் கூடாது. ஒரு காஃபிர் கொலை செய்யப்படின் அதன் ஈட்டுத்தொகை ஒரு முஸ்லிமுடைய உயிருக்கான ஈட்டுத்தொகையில்பாதியாகும். ஜக்காத் வசூலை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்பக்கூடாது'(அதை வசூலிப்பவர்கள்)தொலைவான இடங்களில் இறங்கவும் கூடாது. ஜக்காத் என்ற ஏழை வரியை ஒவ்வொருவருடைய வீட்டிலும் சென்றே வசூலிக்க வேண்டும்.
(கொல்லப்பட்ட) கணவனின் உயிருக்கு நஷ்ட ஈடாகக் கிடைக்கும் தொகையிலும், அவன் சொத்திலும் அவன் மனைவிக்குப் பங்குண்டு. அதே போன்று (கொல்லப்பட்ட) மனைவியின் உயிருக்கு நஷ்ட ஈடாகக் கிடைக்கும் தொகையிலும், அவள் சொத்திலும் கணவனுக்குப் பங்குண்டு. ஆனால், மனைவி கணவனையோ, கணவன் மனைவியையோ கொல்லாமல் இருந்தால்தான் இந்த பாத்தியதை கொண்டாட முடியும். அப்படிக் கொன்றிருந்தால் ஒருவர் மற்றவர் சொத்திலோ, ஈட்டுத்தொகையிலோஎதுவும் பெற இயலாது. எனினும், ஒருவர் மற்றவரைத் தவறுதலாக - கைப்பிசகாகக் கொன்றிருந்தால் மற்றவரின் சொத்துக்கு வாரீஸ் உரிமை உண்டு; நஷ்ட ஈட்டுத் தொகையில் மட்டும் பங்கு இல்லை.
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இருவர் ஒருவர் சொத்துக்கு ஒருவர் வாரீஸாக முடியாது. தன் தந்தையின் சகோதரியின் (மாமியின்) அல்லது தாயின் சகோதரியின் (சிறிய தாயின்) கணவனுக்கு ஒரு பெண் மனைவியாகக் கூடாது.
அத்தாட்சி காட்டி நிரூபிக்க வேண்டிய பொறுப்பு வாதியுடையது. பிரமாணம் செய்ய வேண்டியவன் பிரதிவாதியாவான். ஒரு பெண் (தன் தகப்பன், கணவன், மகன் போன்ற) உறவின் முறையின்றி, மூன்று நாட்கள் பயணமுள்ள தூரத்தைத் தனியே பிரயாணப்படக் கூடாது. அஸருத் தொழுகைக்குப் பின்னர் (சூரிய அஸ்தமனம் வரை) வேறு எந்தத் தொழுகையும் தொழக்கூடாது. ஈதுல் ஃபித்ரு, ஈதுல் அள்ஹா ஆகிய இரண்டு பெருநாட்களிலும்நோன்பு வைக்கக் கூடாது. (மக்கா)வெற்றிக்குப் பின்னர் (அதை விட்டு) இடம் பெயரத் தேவையில்லை.
குறைஷிக் குலத்தவரே! நான் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
[குறைஷித் தலைவர்கள் சொன்னார்கள்: "நன்மையைத் தான் (எதிர்பார்க்கிறோம்). நீங்கள் ஒரு கண்ணியமான சகோதரர்; கண்ணியமான சகோதரர் ஒருவரின் புத்திரர்" என்று]
நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அவர்களை நோக்கி கூறினார்கள்; (அப்படியாயின்) யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) தங்கள் சகோதரர்களிடம் சொன்ன பதிலையே நானும் உங்களிடம் தெரிவிக்கிறேன்."இந்த நாளில் உங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டுமில்லை; அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன். நீங்கள் போகலாம், உங்களை விடுதலை செய்து விட்டேன். (நூல்கள்: அபூதாவூது, இப்னு மாஜா, மிஷ்காத்)

:
:
:
:





ShareShare


No comments:

Post a Comment