Wednesday, October 18, 2017
Islamic Article
இஸ்லாம் வாழ்வியல்: படைப்புகளைப் பழிக்காதீர்கள்!
:
உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற வித்தியாசமும் வேறுபாடுகளும் மனிதர்களிடையே இருக்கக் கூடாது என்பது நபிகள் நாயகத்தின் போதனை.
அல்லாஹ்வின் படைப்புகளில் எதையும் பழிக்காதீர்கள்!
மானிடரில் எவரையும் பரிகசிக்காதீர்கள்!
குட்டையானவர்களைக் கண்டு குறைகூறும் நோக்கத்தில் ஏளனம் புரியாதீர்கள்!
பெண்கள் மீது களங்கம் கற்பிக்கும் பொருட்டு அவதுாறு சொல்லாதீர்கள்!
அண்ணல் நபியின் அறக்கட்டளைகள் இவை.
அவதுாறு, ஏளனம், பரிகாசம், எள்ளல், இகழ்ச்சியுரை ஆகியவற்றை இறை விசுவாசிகள் தவிர்க்க வேண்டும். அனைத்துப் படைப்புகளையும் அழகாகவே படைத்திருப்பதாகச் சொல்கிறான் இறைவன். ஆகவே, ஒருவர் மற்றவரைப் பழிப்பதும், அவதுாறாகப் பேசுவதும் ஆண்டவன் வெறுக்கும் செயல். அவன் தேவையின்றி வீணுக்காக யாரையும், எதையும் சிருஷ்டிக்கவில்லை என்று குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.
எனவே, படைப்புகளில் எதையும் பரிகசிக்கும் உரிமை மனிதர்களுக்குக் கிடையாது. உருவத்தைப் பார்த்து எள்ளி நகையாடுவது பாவச் செயல். உருவத்தைவிட உள்ளம் உயர்ந்தது. தோற்றத்தைக் காட்டிலும் துாய எண்ணமும் உணர்வும் மேலானவை.
அவ்வாறே, பெண்கள் மீது அவதுாறு சொல்வதும் பெரும் பாவம் என்று குர்ஆனும் நபிமொழியும் அறிவுறுத்துகின்றன.
“விசுவாசிகள் யாவரும் நிச்சயமாக சகோதரர்களே. ஆகவே, உங்கள் சகோதரர்களுக்கிடையில் ஒழுங்கையும் சமாதானத்தையும் நிலைநிறுத்தி சுமுகமாக இருங்கள். இதில் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பீர்fகளாக. அதனால், அவனுடைய கிருபையைப் பெறலாம்..”.
இப்படி சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் எடுத்துரைக்கிறது குர்ஆன். மனிதர்கள் தங்களுக்கிடையே ஒழுங்கைக் கடைப்பிடித்து சுமுகமாக வாழ வேண்டும்.இறைவனுக்குப் பயந்து நடக்க வேண்டும்.
மேலும் சில மெய்ஞான வசனங்கள்
விசுவாசிகளே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். அவர்கள் மற்றவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். அவ்வாறே, எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். அவர்கள் பரிகாசம் செய்பவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் மற்றவரை இழிவாகக் கருதி குற்றம் குறை கூறவேண்டாம்.
உங்களில் ஒருவர் மற்றவருக்குத் தீய பட்டப்பெயர் சூட்ட வேண்டாம். அது பாவமாகும். எவர்கள் இவற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள் வரம்புமீறிய அக்கிரமக்காரர்கள் ஆவர்.
ஆண்களாயினும் பெண்களாயினும் ஒருவர் மற்றவரை பரிகாசம் செய்யக்கூடாது. பழித்துப் பேசக் கூடாது. ஏனென்றால், மேலானவர்களாகத் தங்களை நினைத்துக் கொண்டு பரிகாசமும் ஏளனமும் புரிவோர் தாங்களாகவே தாழ்ந்து போகக்கூடும். இறைவன் அவர்களைத் தாழ்த்தி விடுவான். விசுவாசிகள் அத்தகைய செயலில் ஈடுபடக்கூடாது. அது பாவச்செயல் ஆகையால் அக்கிரமம் புரிந்தவர்களாக அவர்கள் ஆகிவிடுகின்றனர். இறை நம்பிக்கையுடையவர்கள் இன்னொருவரை இழித்தும், பழித்தும் பேசக்கூடாது என்பது இறைவனின் ஆணை. இதுவே நபி பெருமானின் நல்வாழ்வுக் கட்டளை.
காரண காரியமின்றி ஒருவர் மற்றவர் விவகாரத்தில் ஈடுபடுவது வெறுக்கத் தக்கது. ஒருவன் நியாயமில்லாமல் மற்றொருவரின் தன்மானத்தில் தலையிடுவது அதிகப் பிரசங்கித்தனமாகும் என்பதும் அவர்களின் அறிவுரை. தமது துணைவியார் ஆயிஷா நாயகியை நபிமணி கடிந்துகொண்ட ஒரு சம்பவம் உண்டு. அவரது மற்றொரு மனைவி சஃபிய்யா நாயகி சற்று குள்ளமானவர். ஆயிஷா நாயகி அந்த நிலையை சுட்டிக்காட்டிப் பேசினார்.
“நாயகமே! சஃபிய்யா குட்டையான பெண்ணாக இருப்பதே அவர் மீது குறை காண்பதற்குப் போதுமான காரணம் அல்லவா?” என்றார் ஆயிஷா அம்மையார். அதற்கு உடனடியாக அண்ணல் நபி பதிலளித்தார்கள். “ஆயிஷா! நிச்சயமாக ,நீங்கள் கூறிய இந்த வார்த்தை கடலில் கலக்கிவிடப் படுமானால் உண்மையாகவே அது கடலை அழுக்காக்கிவிடும்!”
அவதூறாகவோ, ஏளனமாகவோ யாரைப் பற்றியும் பேசக்கூடாது என்பதை அந்த அளவுக்கு இறைவனின் துாதர் கண்டித்தார்கள்.
No comments:
Post a Comment