Sunday, October 29, 2017

Islamic Article

நபிகள் வாழ்வில்: கொஞ்சம் அமைதியாக இருங்கள் : நபிகளாரின் திருச்சபைக்கு வந்த ஒருவர் அங்கிருந்த மூத்த நபித்தோழர் அபூபக்கரை மிகவும் கடுமையான வார்த்தைகளால் இழிவுபடுத்த ஆரம்பித்தார். அதை அபூபக்கர் பொருட்படுத்தாமல் அமைதி காத்தார். வந்தவரோ தொடர்ந்து கடும் வார்த்தைகளால் சாடி கொண்டிருந்தார். அப்போதும், அபூபக்கர் வாயைத் திறக்கவில்லை. ஆனால், சாடல் ஓய்வதாக இல்லை! இனியும் பொறுக்க முடியாத எல்லை மீறிய நிலையில், அபூபக்கர் அவருக்கு பதில் கூறத் தொடங்கினார். இதைக் கண்ட நபிகளார் விருட்டென்று எழுந்து அங்கிருந்து செல்ல ஆரம்பித்தார். பதறிப்போன அபூபக்கர் அதற்கான காரணத்தை நபிகளாரிடம் கேட்டார். “தோழரே..! நீங்கள் அமைதி காத்த அந்த கடைசி தருணம்வரை உமது சார்பில் வானவர் ஒருவர் உம்மை இழிவுப்படுத்திய மனிதருக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், கோபத்தில் பொறுமையிழந்து நீங்கள் பதிலளிக்க ஆரம்பித்ததும், அந்த வானவர் சென்றுவிட்டார். அதனால்தான் நானும் இங்கிருந்து செல்ல ஆரம்பித்தேன்!” என்று நபிகளார் தமது தோழரிடம் சொன்னார். இறைவனின் அன்பைப் பெற்றுத்தராது பழிக்குப் பழி.. பதிலுக்குப் பதில் என்றில்லாமல் பொறுமையைக் காப்பது இறைவனின் பாதுகாப்பைப் பெற்றுத் தரும். மாறாக, பதிலுக்கு பதில் என்ற போக்கில் நடந்து கொள்வது இறைவனின் அன்பை பெற்றுத் தராது என்பதைதான் நபிகளார் தமது தோழர் அபூபக்கருக்கு விளக்கினார். ஒருமுறை, ஒரு யூத அறிஞரிடம் நபிகளார் கடன் வாங்கியிருந்தார். கடனைத் திருப்பித் தரும் தவணை இன்னும் முடியவில்லை. இந்நிலையில், நபிகளாரிடம் வந்த அந்த யூதர் கடனை உடனே திருப்பித் தரும்படி வற்புறுத்த ஆரம்பித்தார். “அய்யா, தற்போதைய சூழலில் தங்களது கடனைத் திருப்பித் தரும் நிலையில் நான் இல்லை!” என்று நபிகளார் எவ்வளவோ சொல்லியும் அந்த யூதர் கேட்பதாயில்லை. “தவணை முடியும் நாள்வரை என்னால் பொறுத்திருக்க முடியாது. என் கடனை இப்போது உடனே திருப்பித் தரும்வரை இங்கிருந்து நான் ஒரு அடியும் நகர்வதாக இல்லை. உங்களையும் நகரவிடுவதாக இல்லை!” என்று முரண்டு பிடித்தார் அந்த யூதக் கனவான். அத்துடன் நிற்காமல் நபிகளாரை தடுத்து வைத்துக் கொண்டார். இந்த சம்பவம் நிகழ்ந்த சமயத்தில் மொத்த மதீனாவின் அரசியல் அதிகாரமும் நபிகளாரின் கையில் இருந்தது. இந்த அதிகாரத்தைக் கையிலெடுத்து யூதரை அங்கிருந்து அகற்றிட வேண்டும் என்றுதான் சுற்றி நின்றிந்த நபித்தோழர்கள் நினைத்தார்கள். பொறுமையிழந்த நபித்தோழர்களில் ஒருவர், “இறைவனின் திருத்தூதரே, கிட்டதட்ட ஒரு கைதியைப் போல தங்களைத் தடுத்து வைத்திருக்கும் இந்த யூதரின் செயலை பொறுத்துக் கொள்ள இயலவில்லை!” என்று கோபத்தை வெளிப்படுத்தவும் செய்தார். “தாங்கள் சொல்வது உண்மைதான் தோழரே. இறைவன் அதிகார துஷ்பிரயோகம் செய்வதைத் தடுத்திருக்கிறான். அவர் கடன் அளித்தவர். நான் கடன்பட்டவன். கொஞ்சம் அமைதியாக இருங்கள்!” என்று அவரைச் சமாதானப்படுத்தினார். இரவு கடந்து பொழுதும் புலர்ந்தது. கும்மிருட்டு விலகி பொழுது புலரும் அந்த வேளையில், யூதரின் மனக்கதவுகளும் திறந்தன. நபிகளாரின் ஆளுமையால் அவர் ஈர்க்கப்பட்டார். தமது செல்வத்தையெல்லாம் இறைத்தூதரின் திருப்பணிகளுக்காக அர்ப்பணித்தார்.

No comments:

Post a Comment