Wednesday, October 25, 2017
Islamic Article
ஞானியர் வாழ்வில்: ஹக்கீம் லுக்மான் தந்த தீர்வு
:
செல்வச்சீமான் லகீனின் அலங்கார மாளிகையில் சூதாட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்த ஆற்றங்கரை மாளிகையில் பெரும்புள்ளிகள் திரண்டிருந்தனர். லகீனுக்கு சூதாட்டம் கைவந்த கலை. அதனால் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆட்டம் தொடங்குவதற்கு முன் மற்றொரு சூதாட்டப் புள்ளி ஒரு நிபந்தனை விதித்தான். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுபவன் கேட்பதையெல்லாம் தோற்பவன் ஒட்டுமொத்தமாக ஒப்படைத்துவிட வேண்டும் என்பதே ஒப்பந்தம்.
லகீன் மறுக்கவில்லை.தோல்விக்கும் தனக்கும் தொலைதுாரம் என்ற உறுதியுடன் சூதாட்டத்தைத் தொடங்கினார். இரவு முழுதும் நடந்த ஆட்டத்திற்கு விடியும்வரை ஒரு முடிவு இல்லை. அதனால் பகலிலும் தொடர்ந்தது.
மாலை நேரத்தில் பரபரப்பு. எதிர்த்து விளையாடியவன் வெற்றி பெற்றதால் லகீனுக்குப் பெரும் அதிர்ச்சி. அவரது ஆதரவாளர்கள் திகைத்துப் போய் நின்றனர்.
“லகீன்! ஒப்பந்தத்தை உடனடியாக நீ நிறைவேற்ற வேண்டும். நான் கேட்டதையெல்லாம கொடுக்க வேண்டும். நான் சொல்வதை நீ செய்தாக வேண்டும். நான் இப்போது உத்தரவிடுகிறேன்! இந்த ஆற்று நீர் முழுவதையும் நீ குடித்துவிட வேண்டும்.அதைச் செய்யாவிட்டால் உன் கண்கள் இரண்டையும் என்னிடம் தந்துவிட வேண்டும். அது மட்டுமல்ல! இந்த ஆற்றங்கரை மாளிகை, உன் சொத்துகள், அனைத்தையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டும்!”
தோல்வியில் நிலைகுலைந்திருந்த லகீன், எதிரியின் கட்டளையைக் கேட்டு கதி கலங்கினார். முடிகிற காரியமா இது? சற்றே சமாளித்துக்கொண்டு ஒரு நாள் அவகாசம் தரும்படி கேட்டுக் கொண்டார். வெற்றிபெற்ற எதிரி ஒப்புக் கொண்டான். சூதாட்ட மண்டபம் காலியாகி விட்டது.
ஒருநாளில் என்ன செய்ய முடியும்? இடியும் மின்னலும் தாக்கியது போல் மண்டப மூலையில் சுருண்டு விழுந்தார் லகீன்.
லகீனின் தோல்விச் செய்தி பரவியது. அவருடைய அடிமைப் பணியாளர்களில் ஒருவரான லுக்மான் இச்செய்தியைக் கேட்டு தவிதவித்தார். எஜமானருக்கு இந்நிலையா? என்று பதறினார். பெற்றோர்களால் முப்பத்து மூன்றரை பவுனுக்கு லகீனிடம் விற்கப்பட்ட கறுப்பு இனத்தவர் லுக்மான்.
எஜமானருக்காகப் பிரார்த்தித்த லுக்மான்
விறகுச் சுமையுடன் மாளிகைக்கு வெளியே வந்து சேர்ந்த அவரை மனச்சுமை அழுத்தியது. முதலாளி லகீனுக்கு அடிமையான தன்னால் ஆறுதல் கூறமுடியுமா? ‘இறைவன் நாடினால் எதுவும் நடக்கும்’ என்று மனமுருகிப் பிரார்த்தித்தார்.
லகீன் செல்வச் செருக்குடையவராக, சூதாடியாக, இருந்தாலும் அவ்வப்போது லுக்மான் மீது அன்பு செலுத்தியிருக்கிறார். அருகில் அழைத்து நேசத்துடன் பேசியிருக்கிறார்.
லுக்மான் மண்டபத்துக்குள் நுழைந்தார். மூலையில் சுருண்டுகிடந்த லகீன் அருகே சென்றார். அவரைப் பார்த்துக் கண்கலங்கினார். தம்மை தேற்றிக்கொண்டு துணிவுடன் லுக்மான் பேசத் தொடங்கினார்.
“ நீங்கள் கண்கலங்காதீர்கள்! இனி கண்ணீர் சிந்தத் தேவையில்லை. உங்கள் கவலைக்கு மருந்து உள்ளது. இந்தச் சோதனையிலிருந்து நீங்கள் மீள வழி இருக்கிறது!”
ஆறுதலான அவருடைய குரலைக் கேட்டு லகீன் நிமிர்ந்தார். லுக்மான் வழி சொன்னார். கவனமாகக் கேட்டார் முதலாளி. நிம்மதிப் பெருமூச்சுடன் நிமிர்ந்து உட்கார்ந்தார். லுக்மான், வெறும் அடிமையல்ல, அரிய வழிகாட்டி என்ற பெருமிதத் துடன் நன்றி சொல்ல வார்த்தையைத் தேடினார் செல்வச்சீமான் லகீன்.
மறுநாள் ஆற்றங்கரையில் ஊர் மக்கள் அனைவரும் திரண்டனர். ஆற்று நீர் முழுவதையும் லகீன் எப்படிப் பருகுவார்? அதைச் செய்யாவிட்டால் இரு கண்களையும் அல்லவா அவர் இழக்க வேண்டும்! கண்ணைக் கொடுத்துவிட்டு, எல்லா சொத்துகளையும் எதிரியிடம் ஒப்படைக்க வேண்டுமே! பரபரப்புடன் பார்வையாளர் கூட்டம் அலை மோதியது. ஊர்த் தலைவர்களின் முன் லகீனும், சூதாட்ட வெற்றியாளனும் நின்றிருந்தனர். நேரம் வந்தது.
“லகீன்! ஆற்று நீரை அப்படியே குடித்து முடிக்க நீங்கள் ஆயத்தமா அல்லது நீங்கள்?” என்று கேள்வியைத் தொடுத்தான் எதிரி. லகீனிடம் தயக்கமோ மயக்கமோ தலைகாட்டவில்லை.
“ஆற்று நீர் முழுவதையும் பருகிவிட நான் இப்போது தயார்!”
“சரி… நீ குடிக்க ஆரம்பிக்கலாம்!”
“இந்த நீரை ஆற்றின் நீள வாக்கிலிருந்து நான் அருந்த வேண்டுமா, அல்லது அகல வாக்கிலிருந்து பருக வேண்டுமா என்பதை நீ சொன்னால் போதும்!” என்றார் லகீன். சரியான கேள்விதான் என்று திரண்டிருந்த மக்கள் கூறினர்.
சவாலைச் சமாளித்த லகீன்
லுக்மான் ஹக்கீம் முதல்நாள் சொல்லித் தந்த ரகசியம்தான் இது. சூதாட்ட வெற்றியாளன் இந்தக் கேள்வியை எதிர்பார்த்திராததால் திடுக்கிட்டுத் திகைத்துவிட்டான். சற்று நேரத்தில் சமாளித்தபடி ஆற்று நீரை அகல வாக்கிலிருந்து அருந்தும்படி கட்டளையிட்டான்.
“சரி. அப்படியே செய்கிறேன். அதற்கு வசதியாக நீள வாக்கில் ஓடிவரும் ஆற்றுநீரை முதலில் நீ தடுத்து நிறுத்த வேண்டும். அதை நீ செய்து முடித்ததும் இரு கரைகளுக்கும் இடையில் இருக்கக்கூடிய தண்ணீரை நான் குடித்து முடித்து விடுவேன். அடுத்து நீ கரையைத் தொடுமளவுக்கு தண்ணீரைவிட்டு, பிறகு தடுத்துக் கொண்டால் அதையும் அருந்தி முடிப்பேன். இவ்வாறு நீ செய்து கொண்டிருந்தால் நானும் நீர் முழுவதையும் பருகி முடித்துவிடுவேன். அதனால், தொடக்கமாக நீள வாக்கிலிருந்து வரும் நீரைத் தடுத்து நிறுத்து” என்றார் லகீன்.
அந்த நிபந்தனையைக் கேட்டு நிலைகுத்தி நின்றுவிட்டான் எதிரி. ஆற்றங்கரையில் நின்றிருந்த மக்கள் கூட்டம் வியந்து போனது. நீரோட்டத்தை நிறுத்தவா முடியும்? ஓடும் ஆற்று நீரை நீள வாக்கிலோ, அகல வாக்கிலோ குடித்து முடிக்கவா முடியும்?
லுக்மானின் ஆலோசனை அரிய உபாயம் வெற்றிகரமாக அரங்கேறியது. சூதாட்ட வெற்றியாளன் தோல்வியைத் தழுவி பின்வாங்கினான்.
அடிமை லுக்மானின் உத்தியினால் கிடைத்த வெற்றி, விடுதலை இது என்ற உணர்ச்சிப் பெருக்கு லகீனுக்கு வெளிச்சத்தைத் தந்தது.
“இவர் அடிமையல்ல,. அறிவின் சிகரம்! லுக்மானின் நற்பண்புகளுக்கு நானே அடிமை! இவரால் அனைவரும் பயனடைய வேண்டும். சுதந்திர மனிதராக இவர் இயங்கவேண்டும். அதுவே தர்மம்! அதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன் என்ற உறுதியுடன் அவரை விடுவித்தார் லகீன். சுயமாக அறப் பணிகளில் ஈடுபடுங்கள் என்று கூறி பிரியாவிடை நல்கினார் லகீன்.
லுக்மான் யார்?
“திண்ணமாக லுக்மானுக்கு நாம் ஞானத்தை வழங்கியிருக்கிறோம்!” என்று குர்ஆன் கூறுகிறது. இறைவனின் தூதர்களான 25 நபிகளின் பெயர்கள் மட்டுமே காணப்படும் குர்ஆனில், லுக்மானுக்கு தனி அத்தியாயம் தரப்பட்டுள்ளதால் அவருடைய அந்தஸ்து மிக உயர்ந்தது என்ற கருத்து நீண்டகாலமாக நிலவி வருகிறது. லுக்மான் கிமு 1110-ல் வாழ்ந்த எத்தியோப்பிய ஞானி என்று ஒரு கலைக் களஞ்சியம் தெரிவிக்கிறது. அவர் ஆப்பிரிக்காவில் பிறந்தவர், சூடான் நாட்டைச் சேர்ந்தவர் என்று நபி நாயகர் தெரிவித்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அரபு, துருக்கிய இலக்கியங்களில் லுக்மானைப் பற்றிய கதைகளும் வரலாறும் இடம் பெற்றுள்ளன. ஞானச் செம்மலான அவர் இதயக் கோளாறு தவிர்த்த எல்லா நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவத் திறனையும் பெற்றிருந்தார். லுக்மான் ஹக்கீம்
560 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தார் என சரித்திரத் தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment