Tuesday, October 24, 2017
Islamic Article
பெறுவதும் மவுனத்தில்தான்
:
மெஹர் பாபா நினைவு தினம் - ஜனவரி 31
மெஹர் பாபா, புனேயைச் சேர்ந்த ஜொராஷ்ட்ரிய சமயத்தைச் சேர்ந்த ஈரானியப் பெற்றோர்களுக்கு 1894-ம் ஆண்டு பிறந்தவர். 19 வயதில் ஆன்மிக ரீதியான சித்தி பெற்றார் என்று சொல்லப்படுகிறது. 1925-ம் ஆண்டிலிருந்து தனது மறைவுவரை மவுனத்தையே கடைபிடித்துவந்தவர். ஆங்கில எழுத்துப் பலகை மூலமாகவும் சைகைகள் மூலமாகவும் தனது செய்திகளைச் சொன்னார். உலகம் முழுவதும் எண்ணற்ற பயணங்களை நடத்தி சத்சங்கங்களையும் நடத்தினார். தொழுநோயாளிகள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், ஏழைகளுக்குத் தொடர்ந்து சேவைப் பணிகளையும் செய்துவந்தார். நாம் காணும் உலகம் முழுக்கக் கற்பனை என்று சொன்னார். அந்தக் கற்பனையை ஊடுருவுவதன் வழியாகவே ஒவ்வொரு மனித ஆன்மாவும் கடவுளை உணர முடியும் என்றும் எடுத்துரைத்தவர்.
கராச்சியைச் சேர்ந்த ஜாம்செட் மேத்தா என்பவர், “எனது வாழ்க்கை ஏன் இத்தனை சிரமங்களுடன் இருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு மெஹர் பாபா சொன்ன பதில் இது…
நீங்கள் அதிகமாக சங்கடத்துக்குள்ளாகிறீர்கள் என்பது கெட்ட செய்தியே அல்ல. அதை நல்ல செய்தியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அதிர்ஷ்டசாலியும்கூட. ஒரு சத்குருவால் ஒரு பக்தன் பரிசோதிக்கப்படும்போது, அவன் மரண வேதனையை அடையவே செய்வான். அது பயங்கரமாகத்தான் இருக்கும். கடவுளின் இந்த வழி, கொடூரமானதும் தாங்க முடியாததுமாகவே இருக்கும்.
ஆனாலும் கவலைப்படவோ, நம்பிக்கையை இழந்துவிடவோ தேவையில்லை. நல்ல காலம் வரப்போகிறது. இந்தச் சிரமங்களுக்கெல்லாம் பிறகு அமைதியும் ஆசீர்வாதமும் உங்களுக்குக் காத்திருக்கிறது. பயங்கரமான துயரம் என்பது மகிழ்ச்சி அமைதிக்கான சமிக்ஞையாகும். உச்சபட்ச உஷ்ணம், மழை வருவதையே தெரிவிக்கிறது. மிகுந்த மனவேதனையும் தீவிரமான துயரும் மகிழ்ச்சி பிறக்கப் போவதைத்தான் காட்டுகின்றன.
உனது தாங்குதிறனுக்கு அப்பாற்பட்டு கொடுக்கப்படும் எந்த அனுபவமும் உனது சக்தியை மாற்றவே தரப்படுகிறது. உனது எல்லைகளுக்குள் எதுவும் இருக்கும்வரை, அதற்கு அப்பால் உள்ளதை நீ அறியவே போவதில்லை. கடவுள், கடவுள் சார்ந்த விழிப்புணர்வு தொடர்பான அத்தனையுமே எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. அவ்வகையில் பெருந்துயரும், தீவிரமான பிரச்சினைகளால் அலைக்கழிக்கப்படுவதும் பயனுள்ளவையே.
மக்கள் தங்கள் சிரமங்களைத் தீர்க்கச் சொல்லி என்னிடம் பிரார்த்திக்கிறார்கள். அவர்கள் என்னை நேசிப்பதாகச் சொல்கின்றனர். ஆனால் நேசத்துக்கும் பிரார்த்தனைக்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளது. பாரசீக சமூத்தில் பிரார்த்தனைக்கான சைகை என்பது யாசிப்பது, விரும்புவது, ஆசைப்படுவதுதான். அது கடவுளின் ஆசீர்வாதத்தை முன்னிட்டதாக இருந்தாலும். ஒரு மனிதர் உண்மையிலேயே நேசிப்பவராக இருப்பின், தனது நேசத்துக்குரியவருக்கு தன்னை முழுவதுமாக ஒப்படைத்து விடுவார். அதுதான் உண்மையான நேசம். அங்கே யாசகம் இல்லை, விருப்பம் இல்லை, ஆசைகள் இல்லை. நேசிக்கப்படுவதுடன் ஐக்கியமாவதற்கான விழைவு மட்டுமே அங்கிருக்கும்.
நேசம் என்பது சுயத்தைத் துறப்பதாகும். பிரார்த்தனை என்பது எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அங்கே சுயநலம் உள்ளது.
# ஒரு மனிதர் உண்மையிலேயே நேசிப்பவராக இருப்பின், தனது நேசத்துக்குரியவருக்கு தன்னை முழுவதுமாக ஒப்படைத்து விடுவார். அதுதான் உண்மையான நேசம். அங்கே யாசகம் இல்லை, விருப்பம் இல்லை, ஆசைகள் இல்லை.
# சரியான குணமூட்டல் என்பது ஆன்மிக குணமூட்டல் மட்டுமே. குணமூட்டப்பட்ட ஆன்மா என்பது ஆசைகள், சந்தேகங்கள், குழப்பங்களிலிருந்து விடுபட்டதாக, கடவுளின் எப்போதைக்குமான மகிழ்ச்சியில் திளைப்பதாக இருக்கும்.
# நன்மை என்னும் தூய்மையான கண்ணாடியில் கடவுளின் முகம் பிரதிபலிக்கும். உண்மையான அறிவு எட்டப்படும்போது, அங்கு பிரதிபலிக்கப்படும் பிம்பம் உன்னுடைய சுயத்தின் பிம்பம் என்பதை நீ உணர்வாய். கடவுள் அப்படித்தான் எல்லாவற்றிலும் எதிலும் இருக்கிறார்.
# நிஜமானவை அனைத்தும் கொடுக்கப் படுவதும் பெறப்படுவதும் மவுனத்தில்தான். கடவுள் அமைதியாக எவரும் அறியாதபடி, சத்தமின்றி, கேட்காத நிலையில் வேலை செய்துகொண்டிருக்கிறார். அவரது எல்லையற்ற அமைதியை உணர்பவர்களால் மட்டுமே அதைப் புரிந்துகொள்ள முடியும்.
No comments:
Post a Comment