இஸ்லாம் வாழ்வியல்: சாந்தி சமாதானம்
:
மனித உறவுகளில் ஏற்படும் விரிசலுக்கு உச்சவரம்பு மூன்று நாள் என்று நிர்ணயித்த கையோடு மீண்டும் அந்த உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள அழகிய வழிமுறையாய் சலாம் என்னும் முகமனை நபிகளார் முன்மொழிகிறார். பிணங்கியுள்ள ஒருவர் மற்றொருவருக்கு, “இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்!” என்று பரஸ்பரம் பறிமாறிக் கொள்ளும் வாழ்த்து மீண்டும் சகோதரத்துவ உறவுக்கு வழிகோலுகிறது. இதயங்களை இணைக்கிறது. அத்தோடு இறையருளைப் பெற்றுத் தருகிறது.
ஒவ்வொரு பிணக்கிலும் யாராவது ஒருவர் மற்றொருவருக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தியே இருப்பார். இந்த இழப்பை ஈடுகட்டுவதன் முதல் நிலையாக, பாதிப்பை ஏற்படுத்தியவர் வருந்துவதோடு அந்த வருத்தத்தை வாய்மொழியாய் வெளிப்படுத்தும்போது, அந்தப் பிரச்சினை முற்றுப் பெற்றதாகிவிடும்.
“தன்னுடைய சகோதரரின் உரிமைகளைப் பறித்துக் கொண்டவர், தன்னுடைய சகோதரனின் கண்ணியத்தைக் களங்கப்படுத்தியவர் இன்றே உடனடியாக அந்த உறவுகளைச் சீர்செய்து கொள்ளட்டும். இல்லையேல் மறுமைநாளில், அநீதி இழைத்தவரின் நன்மைகள் அவர் இழைத்த அநீதிக்கு ஏற்றாற் போல அநீதி இழைக்கப்பட்டவருக்குப் பகிர்ந்தளிக்கப்படும். ஒருவேளை அப்படி நன்மைகள் இல்லாத பட்சத்தில் அநீதி இழைக்கப்பட்டவரின் தீமைகள் அநீதி இழைத்தவரின் பதிவேட்டில் சேர்க்கப்படும்!” என்று பொருள்படும்படி நபிகளார் எச்சரிக்கிறார்.
சகஜ நிலையை அடையச் சொல்லும் மார்க்கம்
அதேபோல, அடுத்தவரால் பாதிப்புக்குள்ளானவர் தனது மென்மையான போக்கால் அவருடைய தவறுகளை மன்னித்துவிடும்படியும் மற்றொரு தரப்பினரையும் நபிகளார் அறிவுறுத்துகிறார். மனிதரிடையே எழும் கருத்துப்பிழைகள் மனங்களில் கொதிநிலையில் இருக்க ஒருபோதும் இஸ்லாம் அனுமதிப்பதில்லை. அவை தணிக்கப்பட்டு சகஜநிலையை அடையவே மார்க்கம் விரும்புகிறது.
ஒருமுறை நபிகளார் தமது தோழரை நோக்கி கேட்கிறார். “சகோதரர்களே. தீயவர் யார் என்று நான் அடையாளப்படுத்தட்டுமா?”
அங்கு கூடியிருந்தோர், அதைத் தங்களுக்கு எடுத்துரைக்கும்படிக் கேட்கின்றனர்.
“உங்களில் மிகவும் தீயவர் யார் என்றால், யார் எப்போதும் பிறரைவிட்டுத் தனிமையில் இருக்கிறாரோ, யார் தன்னுடைய பணியாட்களிடம் கொடுமையாக நடந்து கொள்கிறாரோ, யார் பிறருக்கு அன்பளிப்பு தர மறுக்கிறாரோ அவரேதான்!” என்றுரைத்தார் நபிகளார்.
“யார் அடுத்தவர்க்கு எதிராக காழ்ப்புணர்வு கொண்டிருக்கறாரோ அவர்தான் மிகவும் தீயவர்” என்று சொன்ன நபிகளார் இன்னும் கொடிய தீயவர் யார் என்பதையும் கூறினார்.
“அடுத்தவர் தவறுகளை மன்னிக்காதவர்கள். அடுத்தவர் தம்மை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டும் அவரை மன்னிக்க மறுப்பவர்கள்” என்று நபிகளார் பல்வேறு நிலை மனிதர்களை அடையாளப்படுத்தி தமது தோழர்களை எச்சரிக்கிறார்.
No comments:
Post a Comment