Friday, October 20, 2017

Islamic Article

மஞ்சள் நிறத்தின் மகான்: சூபி ஞானி நிஜாமுதீன் அவுலியா
:
படையெடுப்பாளர்கள் அந்த ஊர் எல்லையை நெருங்கிவிட்டார்கள். வழியெங்கும் சூறையாடல், கொலை, தீவைப்பு. அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அந்த ஊர் மக்களைப் போலவே அந்தப் பெண்ணும் அவளின் குடும்பத்தினரும் தங்கள் ஊரிலிருந்து தப்பியோடுகிறார்கள். தான் பிறந்த, புகழ்பெற்ற அந்த ஊருக்கு அந்தப் பெண் ஒருபோதும் திரும்பி வரவேயில்லை. காலம்காலமாகப் பலருக்கும் தஞ்சமளித்திருக்கும் பக்கத்து தேசமொன்றில் அடைக்கலம் புகுகிறார்கள்.

புதிய தேசம், வேறுபட்ட மொழி, புதிய பழக்கவழக்கங்கள், விசித்திரமான உணவு முறை. இருந்தாலும் கொஞ்ச காலத்துக்கு ஓரளவு மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது அவளால். அப்புறம் திடீரென்று ஒரு நாள், அவளின் கணவன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறான். இரண்டு குழந்தைகளுடன் அந்தப் பெண் நிர்க்கதியாக விடப்படுகிறாள். மிகுந்த போராட்டத்துடன், தன் கண்ணியத்துக்கு பங்கம் ஏதும் வராமல், கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் தனியொருத்தியாக அந்தக் குழந்தைகளை அந்தப் பெண் வளர்க்கிறாள். சில நாட்கள் அவர்களுக்கு உணவே இருக்காது. நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையிலான ஊசலாட்டமான நாட்கள்! எனினும், அந்தப் பெண் தன் குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொன்னாள். மனஉறுதியும் ஆக்ரோஷமும் கொண்ட தன் தேசத்துப் பெண்களின் கதைகள் அவை. இந்தப் புது நாட்டை ஆள்வதும்கூட ஒரு பெண்தான். அவரும் ஒரு இஸ்லாமியப் பெண்தான்.

உச்சின் என்ற கிராமத்தில் அந்தக் குழந்தைகள் வளர்ந்தார்கள். அந்தக் குழந்தைகளில் ஒரு பையன் அந்தப் பிரதேசத்தின் ஒழுக்கக் கேடுகள், அதிகாரத்தின் அத்துமீறல்கள் போன்றவற்றைக் கண்டு மனம் கசந்து அங்கிருந்து வெளியேறி கொஞ்சம் தூரப் பிரதேசத்துக்குச் செல்கிறான். நதிக்கரையோரப் பிரதேசம் அது. எனினும், ஒவ்வொரு புதன்கிழமையும் தன் தாயைச் சந்திக்க வந்துவிடுவான்.

:

துயரங்களின் வடிகால்

800 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை இது. தன் ஊரைவிட்டுத் தப்பித்து வந்த அந்தப் பெண்ணின் பெயர் பீவி ஸுலைக்கா, படையெடுப்பாளர் பெயர் செங்கிஸ் கான், டெல்லி அரசியின் பெயர் ரஸியா, அந்தச் சிறுவனின் பெயர் நிஜாமுதீன் அவுலியா. தெற்காசியாவின் மகத்தான சூஃபி ஞானிகளில் ஒருவர் நிஜாமுதீன் அவுலியா. அவர் இருந்த பிரதேசத்தின் தற்போதைய பெயர் அத்சீனீ. டெல்லியின் தெற்குப் பகுதியில், கடைகளும், சைக்கிள் பழுதுபார்க்கும் கடைகளும், கூண்டுகளில் அடைக்கப்பட்ட பறவைகளுமாக மிகுந்த நெரிசலுடன் காணப்படும் பகுதி அது.

ஆரவாரம் நிறைந்த அந்தக் கடைகளுக்கு அப்பால் பீவி ஸுலைக்காவின் தர்கா, மாய் சாஹிபா என்ற பெயரில், அமைந்திருக்கிறது. அவர் இறந்த பின் அங்கேதான் புதைக்கப்பட்டார். நிஜாமுதீன் அவுலியா தன் தாயைச் சந்திக்க வந்த புதன்கிழமைகளில் தற்போது பெண்கள் அங்கு வந்து தங்கள் துயரங்களைப் பற்றி முறையிடுவதோடு வேண்டுதல்களையும் செய்துகொள்கிறார்கள்.

நிஜாமுதீன் தஞ்சம் புகுந்த கியாஸ்பூர், குதுப் மினாருக்கு அருகில் உள்ள மெஹ்ரோலியில் இருக்கிறது. யமுனா நதி இந்த இடத்திலிருந்து விலகி ஓட ஆரம்பித்து வெகுகாலம் ஆகிறது. சிஸ்தியா சூஃபி மரபைச் சேர்ந்த ஞானியாக நிஜாமுதீன் தன் வாழ்நாளிலேயே பெரும் புகழ் பெற்றார். அவர் இறந்த பிறகு புதைக்கப்பட்ட இடத்தில் அவருக்கென்றொரு தர்கா உருவாக்கப்பட்டது. அவர் துயில் கொள்ளும் இடத்துக்குப் பக்கதிலேயே தங்கள் இறுதித் துயில் அமைய வேண்டும் என்று சுல்தான்கள் போட்டி போட்டனர். அதன் விளைவாக ஹுமாயூன், முகம்மது ஷா ரங்கீலா போன்றவர்களின் சமாதிகள் நிஜாமுதீன் அவுலியாவின் தர்காவுக்கு அருகிலேயே அமைந்தன.

மஞ்சள் நிறம் மணக்கும் தர்கா

பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இனிய வானிலை நிலவும் சமயத்தில் நிஜாமுதீன் தர்கா அசாதரணமான பூரிப்புடன் காணப்படும். கடுகுச் செடிகளும் சாமந்திச் செடிகளும் அந்த தர்காவின் முற்றத்தில் பூத்துக் குலுங்கும். மஞ்சள் நிறக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அந்த தர்காவுக்கு மஞ்சள் நிறத் தலைப்பாகையோ கழுத்தில் மஞ்சள் கைக்குட்டையோ அணிந்த பக்தர்கள் வருகை புரிவார்கள்.

கவ்வாலிப் பாடகர்களின் ஆர்ப்பாட்டமான வருகையும் அரங்கேறும். பொன்னிறத் துணியொன்றை விரித்துப் பிடித்தபடி கவ்வாலி பாடிக்கொண்டே தர்காவின் மையப் பகுதிக்குச் செல்வார்கள். வழக்கமான நாட்களில் அவர்கள் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை. அந்த தர்காவில் உள்ள அமீர் குஸ்ரூ உள்ளிட்ட நிஜாமுதீனின் சிஷ்யர்களின் அடக்க ஸ்தலத்துக்கும் அப்படியே செல்வார்கள்.

:

வசந்த பஞ்சமி என்று இன்றும் வட இந்தியாவில் கொண்டாடப்படும் மரபிலிருந்து இந்தச் சடங்கு தோன்றியிருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு ஒரு கதையும் சொல்லப்படுகிறது. தன் சகோதரியின் குழந்தை மீது நிஜாமுதீன் மிகுந்த அன்பு கொண்டிருந்தாராம். அந்தக் குழந்தை ஒரு நாள் இறந்துபோய்விட, அவரால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. சோகத்தில் ஆழ்ந்த நிஜாமுதீனை அவரது சிஷ்யரான அமீர் குஸ்ரோ தேற்றுவதற்காக முயன்றார்.

பளிச்சென்ற மஞ்சள் ஆடையை உடுத்தி ஒரு பெண் போல வேடமிட்டுக் கடுகுப் பூக்களைக் கொண்டு தன்னை அலங்கரித்துக்கொண்ட அமீர் குஸ்ரோ நிஜாமுதீனுக்கு முன்பு காமரசம் சொட்டும் பாடல்களைப் பாடினாராம். தன் சிஷ்யர் இப்படிப் பெண் வேடமிட்டுப் பாடிக்கொண்டிருப்பதைப் பார்த்த நிஜாமுதீனின் உதடுகளில் புன்னகை தோன்றியதாம். நிஜாமுதீன் தர்காவில் வசந்த பஞ்சமி கொண்டாடப்படுவதற்கு இந்தத் தொன்மத்தையே காரணமாகக் கூறுவார்கள்.

No comments:

Post a Comment