Tuesday, October 3, 2017

Islamic Article

ப்ராஹீம், இஸ்மாயீல் என்ற மகத்தான நபிமார்களைக் கடந்து வரலாற்றில் உயர்ந்து நிற்கும் மற்றொரு பெயர் இப்ராஹீம் நபியின் மனைவியான ஹாஜிராவின் பெயர். இந்த அம்மையாரின் தியாகம் கணவரையும், மகனையும் விஞ்சி நிற்பது.
இறைக்கட்டளையால் திக்கற்ற நிலையில் பாலைவனத்தில் பரிதவித்து நின்ற வரலாற்று நாயகி இவர். கையில் பச்சிளங்குழந்தையோடு (இஸ்மாயீல்) இறையருள் என்ற ஒற்றை ஆதரவு தவிர, வேறு எதுவுமின்றித் தவித்து நின்றவர். கொடுக்கப் பால் இன்றி அழுதழுது நின்ற குழந்தையின் தாகம் தீர்க்க ஒரே ஒரு சொட்டு குடிநீராவது கிடைக்காதா என்று சபா, மர்வா மலைகளுக்கிடையே ஓடோடித் தவித்தவர். அந்த அபலைப் பெண்மணியின் தவிப்பும் அலைக்கழிப்பும் இறைவனின் பேரருளுக்கு ஆளானது. தாகத்தால், அழுது புரண்டுகொண்டிருந்த குழந்தையின் காலடியிலேயே ஜம் ஜம் என்ற வற்றாத நீரூற்றாய் பெருக்கெடுத்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளையும் தாண்டி லட்சக்கணக்கான ஹஜ் புனிதப் பயணிகளின் தாகம் தீர்க்கும் அற்புத நீரூற்றைப் பெற்றுத் தந்தவர் அம்மையார் ஹாஜிரா.
 
‘ஜம் ஜம்’ நீரூற்றின் ஒவ்வொரு துளி நீரிலும் அந்த அம்மையாரின் தவிப்பை இன்றளவும் புனிதப் பயணிகள் உணர்வது தவிர்க்க இயலாதது.
ஹாஜிரா அம்மையாரின் தவிப்பை வெளிப்படுத்தும் விதமாகவே, துல்ஹஜ் மாதத்தில் மேற்கொள்ளப்படும் கஅபாவை சந்திக்கும் ஹஜ் பயணத்திலும் அல்லது மற்றகாலங்களில் மேற்கொள்ளப்படும் உம்ராவிலும், சபா, மர்வா மலைகளுக்கிடையே ஹாஜிரா அம்மையாரின் தியாக வரலாற்றை நினைவுறுத்தும் விதமாக புனிதப் பயணிகள், ‘ஸயீ ’ எனப்படும் தொங்கோட்டம் ஓடுகிறார்கள்.
“எங்கள் இறைவனே..! எங்கள் குற்றங்குறைகளை மன்னித்தருள்வாயாக! எங்களிடம் உள்ள தீமைகளை அகற்றுவாயாக..! எங்களை நல்லவர்களுடன் மரணிக்கச் செய்வாயாக..! தூதர்களின் வாயிலாக நீ அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தந்தருள்வாயாக..! மேலும், மறுமை நாளில் எங்களைக் கேவலப்படுத்தி விடாதே..! திண்ணமாக நீ வாக்குறுதி மீறாதவன் ஆவாய்..!” – என்று இறைநம்பிக்கையாளர்களின் பிரார்த்தனைக்கு இறைவன் இப்படி பதில் அளிப்பதை திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது:
“உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்க மாட்டேன். அவர் ஆணாயினும் சரி.. பெண்ணாயினும் சரியே! நீங்கள் ஒருவர் மற்றொருவரிடமிருந்து தோன்றிய ஒரே இனத்தவரே!”
இந்த நல்லுரைகள் ஹாஜிரா அம்மையாரின் தியாகத்துக்கும் பெண்ணினத்துக்கும் இறைவன் தரப்பிலிருந்து கிடைக்கும் சமத்துவச் சிறப்பாகும்.

No comments:

Post a Comment