*மிஃராஜ் இரவின் பெயரால் பித்அத்கள்*
எல்லா வணக்க வழிபாடுகளிலும் பித்அத் எனும் புதுமையைப் புகுத்தி விட்ட
இந்தச் சமுதாயம் சமுதாயம்h மிஃராஜின் பெயராலும் பல்வேறு பித்அத்களைச்
செய்து வருகின்றது.
ரஜப் 27ம் இரவு தான் இந்த மிஃராஜ் நடைபெற்றது என்று தவறாக விளங்கிக்
கொண்டு, அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல நூதன அனுஷ்டானங்களை
பித்அத்தான விஷயங்களைச் செய்கின்றனர்.
"மிஃராஜ் இரவில் வானத்திருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி
இறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும்
நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப்
பொழிகின்றனர்'' என்று எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுதி
வைத்துள்ளனர்.
இதனால் சிறப்புத் தொழுகைகள், சிறப்பு நோன்புகள், உம்ராக்கள், தர்மங்கள்,
பித்அத்தான காரியங்களான ராத்திப் மஜ்ஸ்கள், மவ்த் வைபவங்கள் போன்ற
காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிப்பதை பரவலாக நடைமுறைப்படுத்தி
வருகின்றார்கள்.
அந்த இரவில் இவ்வாறு எழுந்து நின்று தொழுதால் தனிச் சிறப்பு உண்டு என்று
எண்ணுகின்றனர். எப்பொழுதும் வழமையாக ஒருவர் இரவில் தொழுது
வருகிறாரென்றால்அவ்விரவில் தொழுவது தவறல்ல. ஆனால் பிரத்யேகமாக இந்த
இரவுக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது என்று நினைத்து வணங்குவது தான்
தவறு.
அதிலும் வழக்கமான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுதால் கூட பரவாயில்லை. புதிய
புதிய முறைகளில் தொழுகையைத் தாங்களாக உருவாக்கி தொழுவது தான் இதில்
வேதனைக்குரிய விஷயம்.
6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும்
குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவை ஓத வேண்டும். 3ம் கமா 100 தடவையும்,
இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும்.
3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை
குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும்.
இரண்டு ரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃபவும், ஈலாஃபி குறைஷ்
சூராவை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி தொழுகை முறையை
மாற்றி, இதைத் தொழுதால் ஏராளமான நன்மைகள் என்றும் எழுதி வைத்துள்ளனர்.
இது மட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர்.
இவைகளெல்லாம் நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று
கேட்பவர்களும் உள்ளனர். எவ்வளவு பெரிய நற்செயலாக இருந்தாலும் அதைப் பற்றி
அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதை
மறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுப்பதா?
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை
அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்பட வேண்டியதே!
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரீ (2697)
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார்
செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: முஸ்லிம் (3243)
இவையெல்லாம் நல்ல செயல் தானே ஏன் செய்யக் கூடாது? என்று கேட்பவர்களிடம்
அல்லாஹ் ஒரு கேள்வியைக் கேட்கின்றான்
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா?
(திருக்குர்ஆன் 49:16)
அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம்
அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்குச் சமமாக ஆகி விடும்.
லைலத்துல் கத்ர் எனும் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். அது போல் இந்த மிஃராஜ் இரவுக்கும்
சிறப்புண்டு என்று கூறியிருக்க வேண்டும். இந்த நாளில் சிறப்புத்
தொழுகைகள் தொழுது, நோன்பு வைத்தால் அதிக நன்மை உண்டு என்று அல்லாஹ்
கூறியிருக்க வேண்டும். அல்லது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களாஎன்று
பார்க்க வேண்டும்.
இவ்விருவர்களும்கூறவில்லையென்றால் இவர்களுக்குத் தெரியாத நல்ல விஷயமா
நமக்குத் தெரியப் போகின்றது? அல்லது அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும்
நல்ல விஷயத்தை கற்றுக் கொடுப்பதில் குறை வைத்து விட்டார்களா?
யாரைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அல்லாஹ் கூறுகின்றான்.
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை
விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை
அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
(திருக்குர்ஆன் 59:7)
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் இரவுக்கு சிறப்புள்ளது என்று கூறியதாக எந்த
அறிவிப்பும் இல்லை. இதையெல்லாம் மீறி நாம் மீண்டும் இது நற்செயல் தானே
என்று சொன்னால் இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ்வின் பிரியத்தை நாம்
பெற முடியாது. மாறாக நாம் அல்லாஹ்வை வெறுத்ததாக ஆகி விடும். ஏனெனில்
அல்லாஹ் கூறுகிறான்.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்!அல்லாஹ் உங்களை
விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்;
நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும்,
இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை)
மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக!
(திருக்குர்ஆன் 3:31, 32)
எனவே அல்லாஹ்வின் பிரியம் வேண்டுமென்றால் அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தராத
இந்தச் செயல்களைப் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வளவு மறுப்புகளிருக்கஇன்னும் சிலர் இந்த இரவிலே பள்ளிகளில் திக்ரு
என்ற பெயரில் சப்தமிட்டு நபி (ஸல்) அவர்களின் வழிக்கு மாற்றமாக நடந்து
வருகின்றனர். இப்படி சப்தமிட்டு திக்ரு செய்வது மிகப்பெரிய தவறு என்று
அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான்.
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும்,
அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும்நினைப்பீராக! கவனமற்றவராக
ஆகி விடாதீர்!
(திருக்குர்ஆன் 7:205)
உங்கள் இறைவனை பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
(திருக்குர்ஆன் 7:55)
ஆனால் இந்த ஆயத்துகளுக்கு மாற்றமாக பணிவில்லாமல் எழுந்து நின்று குதித்து
திக்ரும் பிரார்த்தனையும்செய்கின்றனர். இரகசியமாகக் கேட்காமல்
அந்தரங்கமாக திக்ரு செய்யாமல் கூச்சலும் கத்தலுமாக பகிரங்கமாக திக்ரு
செய்கின்றனர். இதுவெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ள, நரகத்திற்குக்
கொண்டு செல்லக் கூடிய காரியங்களாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும்
உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது
முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம்
என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும்.புதிதாக உருவாகக் கூடியவைகள்
அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு
வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),
நூல்: நஸயீ (1560)
எனவே மிஃராஜ் எனும் விண்ணுலப் பயணத்தை நம்பி, அல்லாஹ்வுடைய வல்லமையைப்
புரிந்து, அவன் கூறிய பிரகாரமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும்
பின்பற்றி சுவனம் செல்ல முயற்ச்சிப்போமாக!
No comments:
Post a Comment