மனுஷ்ய புத்ரி
ஒரு நீண்ட பயணத்துக்குப் பிறகு தளர்ச்சியும் சோர்வுமாக அவர் வீடு திரும்பியிருக்கிறார். அப்போதே மணி மூன்றாகி விட்டது. அடுத்த நாலரை மணிக்கு ஒரு கமிட்டி கூட்டம். ஐந்து மணிக்குப் பொதுக்கூட்டம். அதற்குப் பிறகு ஒரு விருந்து.
தலை தெறிக்கும் அவசரத்துடன் ஓடி வந்தாலும் ஒன்றன் பின் ஒன்றாக நெருக்கித் தள்ளும் இத்தனை அலுவல்களுக்கிடையிலும் வரவேற்பறையில் அவரைக் காண வந்து காத்துக் கிடக்கும் கூட்டத்தைக் காண்கையில், அவருக்குப் பொறுமை குலைந்து போகிறது. அவரும் ஒரு மனிதர் தாமே? கல்லாலும் இரும்பாலும் ஆக்கப்பட்ட சமமான பொருளைப் போன்றவரில்லையே? அறுபது தியாலம் கொண்டோடும் ஒருமணிப் பொழுதைப் போல் நிமிடத்துக்கு நிமிடம் ஓட முடியுமா?
அப்பப்பா...பொழுதோடு போட்டி போடும் ஓட்டம்! மூச்சைத் திணறச் செய்யும் இந்தப் போராட்டப் பந்தயம் போன்ற வாழ்க்கைக்கு உட்பட்டிருக்க வேண்டுமா என்று கூடத் தோன்றுகிறது அவருக்கு.
அலுவலக அறையின் இருக்கையில் வந்து விழும் போது அவருக்கு ஒரே தலை நோவாக இருக்கிறது. அப்போது தான் அன்று முழுதும் குளியல்---- மதிய உணவு ஏதும் முடித்திருக்கவில்லை என்ற நினைவு எழுகிறது. அன்றாட வாழ்க்கையின் அவசியங்களுக்குக் கூட ஊர் ஒழுங்கு வைத்துக் கொள்ள முடியாத வாழ்வு! உணவு, உறக்கம் , ஓய்வு . எல்லாம் எப்போது நெருக்கிறதோ அப்போது தான் வைத்துக் கொள்ள வேண்டும்! காணாத தவித்து ஏங்கும் அருமைக் குழந்தையுடன் கொஞ்சி மகிழச் சிறிதளவு பொழுது கூடக் கிடைப்பதில்லை. மக்களுக்காகச் சேவை செய்யும் ஒரு தொண்டனின் வாழ்வு இது! இந்தப் பொது வாழ்க்கையினால் கிடைத்திருக்கும் வசதிகளையும், செல்வாக்கையும் அனுபவிக்க வேண்டுமென்றால் தனிப்பட்ட சொந்த வாழ்வின் வசதிக் குறைவுகளைப் பொறுத்துத் தானாக வேண்டும்!
இந்த உண்மையை உணர்ந்தே, வரவேற்பறையைக் கடந்து அவர் உள்ளே நுழைகையில் மூளும் எரிச்சலை வெளிக்காட்டாமல் விழுங்கிக் கொள்கிறார். புன்னகை செய்பவர்களுக்குப் புன்னகை செய்தும், குசலம் விசாரிப்பவர்களுக்கு மறுமொழி கூறியும் தன்னை மறைத்துக் கொள்கிறார். எனினும் 'பேட்டிக்கு' காத்திருப்பவர்கள் பட்டியலை எடுத்துக் கொண்டு செயலாளன் உள்ளே நுழைகையில் எரிந்து விழுகிறார்.
"வேலையத்தவனுக! போ போ! இன்றைக்கு என்னால் யாரையும் பார்க்க முடியாது! எனக்கின்னிக்கு உடம்பு சுமில்லை. ஓய்வெடுக்கணும். யாரையும் பார்க்கிறதுக்கில்லை! நாளாக்கிக் காலை எட்டு மணிக்கு வராகி சொல்லி. போ!"
செயலாளன் உள்ளூரச் சிரித்துக் கொண்டாலும், மேலுக்கு மிகவும் பணிவு தொண்டராக காத்து நிற்கிறான். எரிந்து விழுந்தாலும் காத்திருப்பவர்களை ஒருவர் பின் ஒருவராக அழைத்து விசாரிக்காமல் எழுந்து செல்ல மாட்டார் என்பது அவனுக்குத் தெரியும். உணவு கொள்ளாமலேயே பொதுக்கூட்டத்துக்குப் போனாலும் ஆச்சர்யமில்லை. அப்படியெல்லாம் பாராட்டிக் கொண்டிருந்தால் இவர் இந்நாள் மக்கள் தலைவராக வந்திருக்க முடியுமா?
அவன் நினைத்தது தான் நடக்கிறது!
ஒவ்வொருவராக உள்ளே சென்று அவரைப் பார்த்து திரும்புகின்றனர். எல்லோரும் சென்ற பின், செயலாளன் அவர் அருகில் நின்றான். மெல்லிய குரலில், " ஒரு அம்மா வெளியே உங்களை பார்க்கணும்னு காத்திருக்காங்க. அவங்களை பார்த்தால் தூரத்திலிருந்து வந்திருக்காங்கன்னு தோணுது. ஏழையாயிருக்காங்க, அவங்க உங்களைத் தனியா பார்க்கணும்னு சொல்றாங்க. வரச் சொல்லட்டுமா? என்றான்.
தலைவருடைய பொறுமை தகர்ந்து போயிற்று. சினம் பொங்கி வந்தது. மேசையை ஓங்கித் தட்டினார். இங்கிப் பேட்டி சரிந்தது. காகிதங்கள் அடுக்கு குலைந்து சிதறின.
"நான் செத்தொழிகிறேன்... இன்னும் ஒரு அம்மாவாம்! இவன் சிபாரிசு வேற! நானும் ஒரு மனுஷன்னு - அவ கிட்டப் போயிகி சொல்லு! யாராயிருந்தாலும் இனி நாளைக்குத் தான்! மணி இப்பவே நாலரை!"
செயலாளன் அமைதி குலையவில்லை.
இன்னும் பணிவுடன் நயமாகவே உள்ளதை விண்டான்.
"பாவம், அந்தம்மா காலமா விடிஞ்சதிலேருந்து இங்கே வந்து ஓரமாக காத்திருக்காங்க. எவ்வளவு தொலைவு நடந்து வந்தங்களோ?"
"ஏழை, கலைச்சுப் போன வயசான பொம்பிளை. இங்கே வந்ததிலே இருந்து பச்சைத் தண்ணி கூட குடிக்காம உங்களுக்காக, தனியே பார்க்கணும்னு காத்திருக்காங்க. பாத்தாப் போதும். அத்தோட போயிடுவேங்கறாங்க." தலைவர் நாவெழாமல் அமர்ந்திருக்கிறார்.
சற்றைக்கெல்லாம் விலையுயர்ந்த வாயில் திரையை ஒதுக்கிக் கொண்டு செயலாளனைத் தொடர்ந்து உள்ளே வருபவர்களை அவர் சற்றே அலட்சியம் தோய்ந்த முக பாவத்துடனே பார்க்கிறார்.
சூழலுக்குச் சற்றும் பொருத்தமில்லாத தோற்றமுடைய மூதாட்டி உடலை முழுதும் மூடிப் போர்த்த ஆடை. பழையதோர் தாழங்குடை. (நம்பூதிரிப் பெண்கள் குடையில்லாமல் வெளியே இறங்க மாட்டார்கள்.) இழிந்து தொங்கும் தொள்ளைக் காதுகள். பதினெட்டாம் நூற்றாண்டு வரலாற்றுக் காலத்திலிருந்து உயிர் பெற்றதோர் கதாபாத்திரத்தைப் போன்று அந்தம்மாள் அந்தப் பெரிய அறையின் ஓர் மூலையில் ஒதுங்கி நின்றாள்.
தலைவருக்கு கண்கள் நிலைக்கின்றன. புருவங்கள் சுருங்குகின்றன. இறந்த கால இருட்குகையிலிருந்து ஏதோ ஓர் அறிமுகமான உருவத்தைப் பெயர்த்தெடுத்துக் கொண்டு நினைவில் மோதச் செய்யும் முயற்சி... ஒரு நிழல் ... ஒரு சந்தேகம்... சட்டென்று நிமிருகிறார். எழுந்து அவளையே பார்த்துக் கொண்டு வருகிறார். அந்த அம்மாள் அப்போதும் அமைதி குலையாமல் நிற்கிறார்.
தலைவர் தழுதழுக்கும் மனசை நிலைப்படுத்திக் கொண்டு அடங்கிய குரலில் மொழிகிறார்.
"உட்காருங்கம்மா.... எங்க இருந்து வரீங்க...? உங்களுக்கு என்ன வேணும்? எனக்கு இப்ப வேலை அதிகமாயுள்ள நேரம். உங்க விசயத்தைக் கொஞ்சம் சீக்கிரமா சொல்லிட்டாத் தேவலை!"
அந்தம்மாள் தலையைத் தூக்கி அவரைப் பார்க்கிறாள். கழுத்துக்கு மேலும் மூடியிருந்த போர்வை நழுவியது. திகைப்பும், மலைப்பும் குலவ விழிகளில் நீர் தளும்ப அந்த மூதாட்டியும் அவரைப் பார்க்கிறாள். அந்த மெல்லிய குரல், மந்திர ஒலி போல அவருடைய செவிகளில் விழுகிறது.
"உட்கார்வதற்கில்லையப்பா. கோயிந்து, உட்கார வேணாம். இப்ப போயிடுவேன் நான். உன்னைக் கண்டாலே போதும்னு இருந்தது. கோயிந்துவுக்கு என்னைப் புரிஞ்சிருக்குமோ?... இப்ப புரிஞ்சிருக்கும்... ஆனா..." சொற்கள் தடுமாறின.
நெற்றியில் நிலம் பதியத் தொழுது தொழுது எழுந்த வடு துலங்குகிறது. அந்த முதிய கைகளில் காப்புக்களின் தழும்புகள் தெரிகின்றன. அவருடைய உள்ளத்திலிருந்து அவரையறியாமலே ஒலி பிறந்து வந்தது.
"ஓ குஞ்சுத்தாயம்மா!..."
அவர்கள் அசைவற்ற நிலையிலேயே நின்றனர். நெடுங்காலம் பிரிந்த மகனை ஆற்றாமை தீரக் காணும் தாயாய். அந்த அம்மை தன் விழிகளை அவர் மீது நிலைக்க விட்டிருக்கிறாள். அந்தப் பார்வையில் குற்றங் குறைகளோ ஆசை விருப்பங்களோ இல்லை. அன்பின் நெகிழ்ச்சியும், உள்ளார்ந்து கிளர்ந்த நம்பிக்கையொளியுமே அவள் கண்களில் குலவுகின்றன.
நெடுமூச்சின் இழைகள் ஒரு வாழ்க்கை வரலாற்றின் சுருள் முழுவதையும் அவிழ்த்துக் கொண்டு வந்து நிலத்தில் படிகின்றன. பார்க்க மறுத்து விரட்டி விடச் சொன்னாரே!
தன்னுடைய முழு வளர்ச்சியையும் அந்த அன்னை வடிவில் காண்கிறார். குற்ற உணர்வு அரைச்சுமையாய் அழுத்துகிறது. அன்றாடப் பூசனைக்குரிய சில பிரதிமைகள் உண்டென்றறியாமல் எல்லாம் கல்லென்று கருதியதுண்டு. கற்கள் அடித்து நொறுக்கப்பட வேண்டியவை தானே?
அதற்காகக் கிளர்ந்த போராட்டங்களில் முன்னேறி முன்னேறித்தான் அவர் இத்துணை உயரத்துக்கு வந்திருக்கிறார்.
ஆனால் இடவிடாத தாக்குதல்களில் உடைந்து சிதறிய அந்தக் கற்குவியல்களுக்கிடையே அகப்பட்டு பரிதாபமாகத் துடிக்கும் மனிதத்துவம் நிரம்பிய துடிப்புகளைப் பற்றிய உணர்வே இருந்திருக்கவில்லையா? ரத்தம் கன்றிக் கட்டிப் போன ஊமைக்காயங்கள். கண்ணீரில் கரையாத வேதனைகள்.
பசித் தீயில் வெந்து மாய்ந்தாலும், ஒரு மணியரிசி இரந்து பெறாத வயிறுகள். இந்தப் பெரு வேள்வியில் குருதி சொரியும் பசுக்களில் ஒன்றாக அந்தத் தாய் தம் முன் நிற்கிறாள். அன்பின் அமுத தாரைகளை அருளார்ந்து பொழியும் அந்தத் தாய்! பரிவும் கசிவுமே வடிவெடுத்தாற் போன்ற அந்தத் தாயின் முன் தாம் மிகவும் சிறுத்துக் குன்றி விட்டாற் போல அவருக்குத் தோன்றுகிறது.
அந்த மனிதப் பெருநேயம் கொண்ட அம்மைக்கு முன் அவர் பெரிய பெரிய கூட்டங்களில் சொற்பொழிவாற்றும் தலைவரில்லை. பல்வேறு செயற் குழுக்களில் பொறுப்பாளராயிருக்கும் திறமைசாலியுமில்லை.
எங்கோ தொலைவில் ஒரு குக்கிராமம். அங்கு ஓர் சிறிய குடில். அந்தக் குடிலுக்குரிய பையன் அவன். கவனிப்பரற்ற முற்றங்களிலும், தோப்புகளிலும் மாங்கனிகள் பொறுக்கி உண்டும், குளத்தில் குதித்துத் துளைந்து விளையாடிக் கொண்டும் திரிந்த அவனுக்கு, அப்பன் சிறிய வயதிலேயே காலமாகி விட்டார். மாமன்மார் அவன் தாய்க்கு ஆதரவளிக்கவில்லை. பசித்தீயைப் அவிக்க, குடும்பத்தை வாழ்விக்க அவனுடை தாய் அரும்பாடு பட்டாள். மகனைப் படிக்க வைத்து முன்னுக்கு கொண்டு வர வேண்டுமென்பது அவளுடைய அரிய இலட்சியம். அவனும் ஆர்வத்துடன் படித்தான். துவக்கப் பள்ளிக் கல்வியை ஒரே தாவலில் முடித்து விட்டான். பண்ணை வீட்டில் குஞ்சுத்தாயம்மை அவன் தாயிடம் மொழிந்த குரல் நினைவில் ஒலிக்கிறது.
"கோவிந்துப் பயல் புத்திசாலியடி, லட்சுமி! அவன், பாரு, நிச்சயமாக முன்னுக்கு வருவான்."
அவன் தாய்க்கு சந்தோஷமாக இருந்தாலும், வேதனையுடன் தான் பதில் கூறினாள்.
"அவனை எப்படீம்மா நான் படிக்க வைப்பேன்? வயிற்றுப் பாடே பெரும்பாடாக இருக்கம்மா. புத்தகம், பென்சில், நோட்டு அது இதுன்னு பள்ளிக்கூடத்துக்கனுப்ப எவ்வளவு செலவாகும்?"
"இருக்கட்டுமே? ... செலவைப் பத்திக் கவலைப்படாதே. நானொரு வழி சொல்றேன், கேளு. கோயிந்துவை அன்றாடம் காலையில் பூப்பறிச்சிட்டு வரச் சொல்லு. பூசைக்கு பூக்கொண்டு கொடுத்தால் காசு கிடைக்கும்படி நான் வழி பண்ணுறேன்!"
இப்போது, கருணையே உருவான அந்த அன்னை அவன் முன் நின்று அவனையே பார்க்கிறாள்.
இந்த முகத்தில் உலக நாயகியின் சாயயையே அவர் காண்பதாக நினைக்கிறார்.
ஏனிப்படித் தோன்றுகிறது? ஒரு கால், கோயிலின் முன்பிலேயே அந்தத் தாயை பெரும்பாலும் பார்த்திருந்ததாலா? அல்லது அன்னபூரணியைப் போல் பருப்பும் காயும் கலந்த கதம்பச் சோற்று உருண்டையும், கையுமாகவே கண்டிருந்ததால் தானோ?
கோவிந்து அதிகாலையில் எழுந்து காடும் மேடும் திரிந்து தெய்வப் பூசனைக்குரிய மலர்களைக் கொய்து சேமித்து வருவான். அப்போது நல்ல பசி எடுத்து விடும் அவனுக்கு. அப்போது தான் பண்ணை வீட்டில் குழந்தைகளுக்குக் காலை உணவு பரிமாறிக் கொண்டிருப்பார்கள்.
குஞ்சுத்தாயம்மா, அவனையும் உட்கார வைத்து, தயிரும் மாங்காய்க்கறியும் சேர்த்துச் சோற்றைக் குழைத்து, காப்பணிந்த வெண்மையான கையினால் உருட்டி உருட்டி....
அந்தப் பெரிய உருண்டைகள்... அவன் எத்தனை உண்டிருக்கிறான்? அமுதினும் மேலான சுவையுடைய அந்தச் சோற்றை, அதைக் காட்டிலும் இனிய சொற்களோடு அவனுடைய கையில் உருட்டி வைப்பாள். அதைப் பார்த்துக் கொண்டு நெஞ்சு நெகிழ கண்ணீர் கசிய நிற்கும் அவன் தாயிடம் "நீ எதற்கடி லட்சுமி அழறே இப்ப? உன் பையன் படிச்சி, எப்படி உசத்தியா வரப்போறான், பாரு! ஓலைக் கூரையை ஓட்டுக் கூரையாக்குவாண்டி!... என்று நம்பிக்கையூட்டுவாள்.
அவர் மச்சு வீடு கட்டியிருக்கிறார். ஆனால் அதைக் கண்டு மகிழ லட்சுமி உயிர் தரித்திருக்கவில்லை.
No comments:
Post a Comment